கொரோனா வைரஸ் தமிழ் பட உலகை புரட்டி போட்டுள்ளது. 48 நாட்களாக தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன.
கொரோனா வைரஸ் தமிழ் பட உலகை புரட்டி போட்டுள்ளது. 48 நாட்களாக தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. திரைக்கு வர தயாராக இருந்த விஜயின் மாஸ்டர், சூர்யாவின் சூரரை போற்று, ஜெயம் ரவியின் பூமி உள்ளிட்ட பல படங்கள் முடங்கி உள்ளன. ரஜினிகாந்தின் அண்ணாத்த, அஜித்குமாரின் வலிமை, தனுசின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல படங்கள் பாதியில் நிற்கின்றன. விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்களும் முடிவடையாமல் உள்ளன.
வருகிற 17-ந் தேதிவரை ஊரடங்கை நீட்டித்துள்ளனர். அதன்பிறகு இயல்பு நிலை திரும்பி சினிமா உலகம் புத்துயிர் பெற எவ்வளவு நாட்கள் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக இருந்த ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ இணையதளத்தில் வெளியாவதால், அதை பின்தொடர்ந்து மேலும் பல படங்களை டிஜிட்டல் தளத்தில் வெளியிட தயாராகி வருகிறார்கள். இது தியேட்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
திரைக்கு வர தயாராக இருந்த 50 படங்கள் கொரோனாவால் வெளியாகவில்லை என்றும், இதன் மூலம் ரூ.500 கோடி முடங்கி இருக்கிறது என்றும் தயாரிப்பாளர் டி.சிவா கூறினார். பாதியில் நிற்கும் படங்களால் மேலும் ரூ.200 கோடி முடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஊரடங்கு முடிந்தாலும் உடனடியாக தியேட்டர்களை திறக்க வாய்ப்பு இல்லை என்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறும்போது, “கொரோனாவால் தியேட்டர்கள் 48 நாட்களாக மூடிக்கிடக்கின்றன. கோடை விடுமுறையான ஏப்ரல், மே வசூல் மாதங்கள் வீணாக கழிந்து விட்டன. கொரோனா ஊரடங்கினால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ரூ.400 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வருகிற 17-ந்தேதி ஊடங்கு முடிந்தாலும் கூட தியேட்டர்கள் ஜூன் இறுதியில்தான் திறக்கும் நிலைமை உள்ளது. தியேட்டர்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஒரு இருக்கையை காலியாக விட்டு டிக்கெட் கொடுப்பதா? முழுவதும் நிரப்புவதா? என்பதை அரசிடம் கேட்டு முடிவு செய்வோம். எங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும்” என்றார்.