‘மருதநாயகம்’ படத்தில் வேறு நடிகர் நடிக்க வேண்டும் என்று கமல் நேரலையில் தெரிவித்துள்ளார்.
கமல் இயக்கி, நடித்து, தயாரிக்க திட்டமிட்ட படம் ‘மருதநாயகம்’. இதன் தொடக்க விழாவை மிகப்பிரம்மாண்டமாக நடத்தினார் கமல்ஹாசன். இந்தப் படம் தொடர்பான வீடியோக்கள் இப்போது இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்தப் படம் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பதும் தெரியாமலேயே இருக்கிறது. நேற்று (ஏப்ரல் 2) நடைபெற்ற கமல் – விஜய் சேதுபதி நேரலையில் கூட ‘மருதநாயகம்’ தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதில் “‘மருதநாயகம்’ படம், வெப் சீரிஸ், புத்தகம் என எந்த வடிவத்தில் தான் வரும்” என்ற கேள்விக்கு கமல் கூறியதாவது:
“புத்தகம் வடிவில் என்றால் உடனே வந்துவிடும். நான் அடுத்ததாக ஒரு குறுங்காவியம் ஒன்று எழுதியுள்ளேன். அதற்குப் பெயர் ‘சின்ன கான்சாய்’. அது கான்சாயின் மரணத்துக்குப் பிறகு நடந்த நிகழ்வுகளின் கோர்வை அது. எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை அது. அதெல்லாம் எளிதாக செய்துவிடலாம். படமென்றால் பணம் வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம், ‘மருதநாயகம்’ கதையைக் கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டும். நான் நினைத்துக் கொண்டிருந்த மருதநாயகத்துக்கு 40 வயது. அல்லது வேறு நடிகர் நடிக்க வேண்டும். இல்லையென்றால் கதையைக் கொஞ்சம் மாற்ற வேண்டும்”
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.