க.விக்னேஷ்வரன்
திரையரங்கங்களுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இடையேயான உறவு. கேளிக்கை அம்சம் என்ற அளவீட்டைத் தாண்டி ஓர் உணர்வுப்பூர்வமான பந்தத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. பண்டைய நாட்கள் தொட்டே கலையைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம் கலையின் இன்றைய நவீன வெளிப்பாடான சினிமாவை கொண்டாடுவதை தன் கலாச்சார அடையாளமாகவே சுவீகரித்துக் கொண்டுள்ளது.
அந்த கொண்டாட்டங்கள் நடக்கும் திருவிழா களமாகத் திரையரங்கங்கள் இருந்து வந்தன. மதுரையில் உள்ள தங்கம் திரையரங்கத்தை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்டப் போகிறார்கள் என்ற செய்தி வெளியானதும் மதுரை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தாங்கள் கொண்டாட்டங்கள் இளைப்பாற இடம் கொடுத்த திரையரங்கத்தைக் கடைசியாகப் பார்த்துவிட்டு கனத்த நெஞ்சத்துடன் பிரியா விடை அளித்துச் சென்றனர். இது போன்ற நிகழ்வுகள் திரையரங்கங்களுக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இடையேயான உறவுக்கு எடுத்துக்காட்டு. ஆனால் இந்த உறவு இனிமேல் தொடருமா என்ற சந்தேகம் சமீபமாக எழுந்துள்ளது.
ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படம் நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி (OTT) ப்ளாட்ஃபாரத்தில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவாமல் இருக்க திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் வீட்டிலிருந்தே திரைப்படத்தைக் கண்டு களிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு சார்பாகச் சொல்லப்பட்டாலும், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் இது பெரும் எதிர்ப்பலையை உண்டு பண்ணியுள்ளது.
இதற்கு முன்பும் சில தமிழ்ப் படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி இருந்தாலும் அவையனைத்தும் சிறிய பட்ஜெட் படங்கள். முன்னணி நடிகர்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்கில் வெளியான பின்பு, பல நாட்கள் கழித்தே ஒடிடி தளங்களுக்கு விற்கப்படும். ஆனால் ஜோதிகா போன்ற முன்னணி நடிகை நடிக்கும் ஓர் திரைப்படம் தங்கள் வசம் வராமல் ஓடிடி தளத்துக்குச் சென்றால் இனிவரும் படங்களும் அப்படிச் செல்ல வாய்ப்புள்ளதாகத் திரையரங்க உரிமையாளர்கள் கருதுவதே இந்த எதிர்ப்புக்குக் காரணம். இனிவரும் காலங்களில் திரைப்படங்கள் ஓடிடி வசம் முழுதாகப் போகுமா? திரையரங்கங்களின் கதி என்ன..? சற்று அலசுவோம்…
ஓடிடி எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியஓடிடி ( Over The Top) எனப்படும் டிஜிட்டல் சேவைகள் 2008-ம் ஆண்டுக்குப் பிறகு அசுர வேகத்தில் வளர ஆரம்பித்தது. ஹெச்.பி.ஓ, பிக் ஃப்ளிக்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் கோலோச்சிவந்த கோதாவில் 2010-ம் ஆண்டு குதித்தது நெட்ஃப்ளிக்ஸ். அதற்கு முன்பு வரை டிவிடி மற்றும் ப்ளூ ரே கேசட்டுகளை வாடகை முறையில் விற்று வந்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ஸ்ட்ரீமிங் தளத்தில் நுழைந்த மூன்று வருடத்தில் அதாவது 2013-ம் ஆண்டு தன் சொந்த தயாரிப்பாக ‘ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்’ தொடரை வெளியிட்டது. மாபெரும் வெற்றியை நிகழ்த்தியது ‘ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்’ தொடர். ( ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸின் இரண்டாவது சீசனின் இறுதியான பதிமூன்றாவது எபிசோடின் இறுதிக்காட்சியில் கெவின் ஸ்பேசி அமெரிக்க அதிபரின் மேசை மீது கைகளால் குத்தும் சத்தமே இன்று வரை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தன் அதிகாரப்பூர்வ தீம் இசையாக வைத்திருக்கிறது. முதல் வெற்றி கொடுத்த செண்டிமெண்ட் இது )அதற்குப் பிறகு நெட்ஃபிளிக்ஸின் பாய்ச்சல் அசுரவேகத்தில் இருந்தது. இன்றைய தேதிக்கு 180 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டு ஓடிடி தளத்தின் ராஜாவாக இருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். 2018-ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ் நாட்டில் முழுவீச்சில் களமிறங்கிய நெட்ஃப்ளிக்ஸுக்கு இங்கே உள்ளூர் நிகழ்ச்சிகளை வழங்கும் ஹாட்ஸ்டார், வூட், ஜி ஒரிஜினல் போன்ற ஓடிடி நிறுவனங்கள் கடும் போட்டியை அளித்தன. இன்றைக்கும் நெட்ஃப்ளிக்ஸ் இவர்களுடன் போராடிக்கொண்டுள்ளது என்பதே நிதர்சனம். இந்தியாவின் பலதரப்பட்ட கலாச்சாரம் சார்ந்த படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைத் தரம் பிரித்து வழங்க முடியாததே நெட்ஃப்ளிக்ஸின் தடுமாற்றத்திற்குக் காரணம். இந்தியச் சந்தையில் முன்னணியில் இருக்கும் ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் மற்றும் ஜி ஒரிஜினல் போன்ற தளங்கள் தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களை தங்கள் தளங்களில் வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றன.
இரட்டிப்பு லாபம் :
தற்போது ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்ற செய்தியை விட, 4.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அத்திரைப்படம் 9 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது என்பதே கோடம்பாக்க வட்டாரத்தில் பேசு பொருளாக ஆகியுள்ளது. தயாரிப்பாளர்களுக்கு இது நம்பிக்கை கொடுக்கும் செய்தியாக இருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களுக்கும், திரைப்பட விநியோகதஸ்தர்களுக்கும் இது பெரும் கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.
இது தொடர்பாகக் கோயம்புத்தூரைச் சேர்ந்த வினியோகஸ்தர் ராஜ மன்னார் கூறுகையில் “படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியானால் எங்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். திரையரங்க உரிமையாளர்களைவிட எங்களுக்குத்தான் பாதிப்பு அதிகம். நஷ்டமே ஆனாலும் திரையரங்க உரிமையாளர்களிடம் கட்டிடமும் நிலமும் இருக்கிறது. ஆனால் நாங்கள் தயாரிப்பாளரிடம் இருந்து படத்தை வாங்கி திரையரங்குகளில் வெளியிட்டுச் சம்பாதித்து வரும் எங்கள் நிலை என்னவாகும்?”
விநியோகஸ்தர்களின் கவலை இதுவென்றால், ரசிகர்களின் மனநிலை வேறுவிதமாக இருக்கிறது. சினிமா ஆர்வலரும் திரைக்கதை ஆலோசகருமான ஹாஷிராமா கூறுகையில் “ இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, ரசிகர்களுக்கு விரும்பத் தகுந்த வகையிலும் இருக்கிறது. இன்றைக்குத் தேதியில் நான் குடும்பத்துடன் திரையரங்கத்துக்குச் சென்று வந்தால் டிக்கெட், பார்க்கிங், பாப்கார்ன் என்று 2000 ரூபாய் செலவு ஆகிறது. இதுவே நான் ஓடிடி தளங்களுக்கு மாதம் 500 ரூபாய் செலுத்தினால் எண்ணற்ற படங்கள், தொடர்களை என் வீட்டின் வசதியான சூழலில் கண்டுகளிக்க முடியும்.
அமெரிக்காவில் இன்று நெட்ஃப்ளிக்ஸ் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டதுபோல்… இங்கும் மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை. அதேபோல் வெகுஜன சினிமாவில் பேச முடியாத பல கருத்துகளை ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களிலும் தொடரிலும் பேசலாம். உதாரணத்திற்குச் சென்ற வருடம் வந்த ‘லெய்லா’ தொடர். அதை திரையரங்குகளில் வெளியிடச் சாத்தியமே இல்லை. ஆனால் அப்படிப்பட்ட கருத்துகளைப் பொதுவெளியில் கொண்டுவர ஓடிடி தளங்கள் வசதியளிக்கின்றன இதனால் சினிமா என்னும் கலை மேலும் மெருகேருகிறது. ஆனால் திரையரங்கங்களே இல்லாமல் ஓடிடி தளங்கள் வசம் திரைத்துறை மொத்தமாகப் போகும்பட்சத்தில் ஓடிடி வைப்பதுதான் சட்டம் என்ற நிலை உண்டாகும் வாய்ப்பும் இருக்கிறது. அரசு ஆரம்பத்திலேயே இதனை ஒழுங்குபடுத்தி வழிமுறை செய்ய வேண்டும்.
உலக சினிமா வரலாற்று ஆர்வலரும், திரைக்கதை எழுத்தாளருமான அஜயன் பாலா இவ்விஷயத்தைப் பற்றி ஆழ்ந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார் “ இந்த கோவிட்-19 வைரஸில் இருந்து மீண்டு நாம் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும் போது பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும். குறிப்பாக சினிமாத்துறைக்கு பெரும் சிக்கல் காத்துள்ளது. குவாரண்டைன் காலகட்டத்தில் ஆன்லைன் ஓடிடி தளங்களை மக்கள் பெருவாரியாகப் பயன்படுத்திப் பழகிவிட்டனர். மேலும் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பினாலும் அவர்கள் பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள வேண்டிவரும். அந்தச் சூழலில் அவர்கள் கண்டிப்பாகத் திரையரங்கம் சென்று பணத்தைச் செலவழிக்க விரும்பமாட்டார்கள்.
அமெரிக்காவில் பெரும் பொருளியல் வீழ்ச்சிக்குப் பிறகான காலகட்டத்தில் இதே பிரச்சனை அங்கே தலையெடுத்தது. அதை சரிக்கட்ட இரண்டு வகையான படங்கள் வெளியாக ஆரம்பித்தன A வகை திரைப்படங்கள் மற்றும் B வகைத் திரைப்படங்கள். பெரிய நடிகர்களை வைத்து பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் A வகை திரைப்படங்கள். அவைகள் நல்ல பெரிய திரையரங்கங்களில் வெளியாகும். சிறிய நடிகர்கள் சின்ன பட்ஜெட் படங்கள் பி வகைப் படங்கள். அவை சின்ன சின்ன அரங்கங்களில் வெளியாகும். பணம் உள்ளவர்கள் A வகை திரைப்படங்களுக்குப் போகலாம் பணப்பற்றாக்குறையில் இருப்பவர்கள் பி வகை அரங்குக்குப் போகலாம். B வகைப் படங்கள் மூலமாக பிரபலமானவர்கள் தான் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் போன்றவர்கள்.
இதே போன்று விரைவில் இங்கும் நடக்கும். கோவிட்-19 பிரச்சனை தீர்ந்த பின்பு, தமிழ் சினிமா வேறு பரிணாமத்துக்கு நகரும். மல்டி ஃப்ளக்ஸ் தியேட்டர்களின் ஆதிக்கம் ஓய்ந்து சிறிய திரையரங்கங்கள் உருவாகும். திருமண மண்டபங்கள் எல்லாம் சிறு சிறு திரையரங்கங்களாக மாறும். இது நிச்சயம் நடக்கும். அதே போல் ஓடிடி-யின் வளர்ச்சியும் பெரும் அளவில் இருக்கும். அதனால் சினிமாவில் தரம் உயர்ந்துவிடும் என்று கூறுவது சரியாகாது. இங்கே மசாலா படங்களில அரைத்த மாவைத்தான் நாளை இவர்கள் ஓடிடி தளங்களிலும் அரைப்பார்கள். ஏனென்றால் சினிமாவின் தளம் தான் மாறுகிறதே தவிர சினிமாவில் இருக்கும் ஆட்கள் மாறப்போவதில்லை. என்ன நடந்தாலும் தமிழ் மக்கள் கொண்டாட்ட மனப்பான்மை கொண்டவர்கள்.
அவர்களுக்குக் கொண்டாடி மகிழ சினிமா அவசியம். வீட்டில் டிவி முன்பு அமர்ந்துகொண்டு கொண்டாத்தின் உச்சிக்குப் போக முடியாது. அதற்கு திரையரங்கங்கள் தேவை. அதனால் திரையரங்கங்கள் தமிழ்ச் சமூகத்தில் நீடிக்கும் ஆனால் மல்ட்டி ஃப்ளக்ஸ் திரையரங்குகள் குறைந்து சின்ன சின்ன திரையரங்கங்களாக உருவெடுக்கும். அது ஒன்றே திரையரங்க கலாச்சாரம் நீடிக்க ஒரே வழி”.
புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் போது.. அதற்கு எதிர்ப்புகள் கிளம்புவதும் பின்பு நாளடைவில் அந்த தொழில்நுட்பம் சமூகத்தில் மைய ஓட்டத்தில் கலந்து வாழ்வின் ஓர் அங்கமாகிவிடுவதும் வரலாறு நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம். ஆகையால் ஓடிடி தளங்களின் வளர்ச்சியைத் தடுப்பது கடினமே. காலங்காலமாக இருந்து வரும் திரையரங்கங்களுக்கும் ரசிகர்களுக்கும் டையேயான பந்தம் நீடிக்கத் திரையரங்க உரிமையாளர்களும் தங்களிடம் பல மாற்றங்களைச் செய்து கொள்ள முன்வர வேண்டும் என்பதே இதற்கான தீர்வாக இருக்கும். அதே சமயம் நம் வீட்டிற்குள்ளேயே பல விஷயங்களைக் கொண்டு வரவுள்ள ஓடிடி தளங்களை எப்படிப் பாதுகாப்பாகக் கையாளுவது (குறிப்பாகக் குழந்தைகள் இருக்கும் வீடுகளில்) என்பதையும் நம் சமூகம் கற்க வேண்டிய காலம் வந்துவிட்டது. மாற்றத்தை எதிர் நோக்குவோம்