கொரோனா பரவலைத் கட்டுக்குள் வைப்பது இன்னும் சவாலாகவே உள்ளது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் தோன்றியதாகவும் சீனா அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த தவறி விட்டது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்
குற்றம்சாட்டி வருகின்றன.
கொரோன வைரஸ் தோன்றிய சீனாவில் கொரோனா நோய்த் தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில், சீனா அதன் ஊரடங்கை முற்றிலும் தளர்த்தி, இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.வணிக வளாகங்கள், நிறுவனங்கள், போக்குவரத்து என அனைத்தும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளன. சீனாவில் மொத்தமாக 82,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 77,911 பேர் குணமாகியுள்ளனர். 4,633 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் கொரோனாவை கட்டுக்குள் வைப்பது தொடர்பாக எதிர்கொண்டு வரும் நிச்சயமின்மை குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வெளிநாடுகளில் வைரஸ் பரவுவது இன்னும் திறம்பட கட்டுப்படுத்தப்படவில்லை. சீனாவில் ஒரு சில பகுதிகளில் கொத்தாக பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், இது தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்கு கணிசமான நிச்சயமற்ற தன்மையைக் கொண்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுப்பதும் அதனைக் கட்டுக்குள் வைப்பதும் இன்னும் சவாலாகவே உள்ளது.
மத்திய வழிகாட்டல் குழு வைரஸ் பரவுவதைத் தடுக்க எந்த முயற்சியையும் விடவில்லை . வலுவான தடுப்பு முதல் வரிசையை உருவாக்க கடுமையாக உழைத்தது. தொற்றுநோய்க்கு எதிரான மக்களின் போரை வென்றெடுப்பதில் முக்கிய பங்களிப்புகளைச் செய்தது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவில் 6.8 சதவீதம் சரிந்து உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால் சீனாவில் தொழில்கள் முடங்கியிருந்ததால் வேலையிழப்பு, சிறு குறு நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்றிருப்பது, வருவாய் இழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளன என கூறினார்.
இந்நிலையில் தொழில் செயல்பாடுகளை மீட்டெடுக்கும் வகையில், நிறுவனங்களுக்கு உத்தரவாதமில்லாத கடன்கள் வழங்கப்படும் என்றும் வட்டி மற்றும் கடன் செலுத்துவதற்கான கால அளவு நீட்டிக்கப்படும் என்றும் சீன அரசு அறிவித்துள்ளது.