நித்திய வழியில் நடத்தல். (அமைதி தேடல்)
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
எந்த மனுசனும் தன்னைத்தானே சோதித்தறிந்து…. 1கொரி.11:28
கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்ப்பையும் குறித்து விசேடமாக தியானிக்கும் போது தன்னைத்தானே சோதித்தறிந்து தற்பரிசோதனை செய்து கொள்வது விசுவாசி களுக்கு இயல்பானதாகும். விசுவாசிகளான எம் மத்தியில் இதனைக் குறித்து விளங்கிக் கொள்ள முடியாத ஓர் கேள்வி எழுந்துள்ளதை நாம் மறைக்க முடியாது. பாவத்தை அறிக்கையிட்டு வெற்றி வாழ்வு வாழ அழைக்கப்பட்ட எமக்கு, ஆண்டவர் ஏற்கனவே வெற்றியை சிலுவையில் அளித்தவிட்டார் என்பது சத்தியம், அதுவே நமது விசுவாசம். அப்படியிருக்க தற்பரிசோதனை செய்வது முக்கியமானதா? பாவத்தை உணர்ந்து அறிக்கையிடுவது வேறு. நம்மை நாமே தற்பரிசோதனை செய்வது வேறு.
நம்மை நாமே வஞ்சிக்காமல் பாவ நிலைமைகளை அறிக்கையிட்டு மனந்திரும்பும் போது விடுதலை கிடைப்பது உண்மை. ஆனால் அத்துடன் நிறுத்தி விடுவதே நம்மை ஆபத்துக்குள் கொண்டு வருவதாகும். நான் இரட்சிக்கப்பட்டேன் அல்லது இயேசுவின் பிள்ளை என்ற பெருமையான எண்ணம் எம்மை குழிக்குள் விழுத்திவிடக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திவிடும். நாம் செய்த தவறுக்கான சூழ்நிலைகளை, காரணங் களை அறிய ஆராயத் தவறும்போது நமது விழுதலுக்கு நாமே வழியமைக்கிறோம்.
நாம் தனித்திருந்து ஆண்டவரோடு வாழப்பழகிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் தேவசந்நிதியில் தேவ ஆவியானவர் எம்மைக் குறித்து என்ன சாட்சி சொல்லுவார் என்பதை நிதானிக்க முடியும். ஆகவேதான் நம்மை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். திருவிருந்தில் பங்கு கொள்ளும் ஒவ்வொரு முறையும் தேவன் எமக்கு அரியசர்ந்தப்பத்தை தருகிறார். அதை நாம் பிரயோசனப்படுத்த வேண்டும்.
அவ்வாறு பிரயோசனப்படுத்தும்போது, நாம் பாவம் பாவம் என்று கலங்கத் தேவையில்லை. அடிக்கடி பாவத்தில் விழுகிறேனே என்ற பயம் அணுகாது. தினம் தினம் நாம் தேவனுடைய தராசில் எம்மை நிறுத்த வேண்டும். அப்பொழுதுதான் நான் நினைத்த, செய்த காரியங்கள் தவறு என்று உணரமுடியும். தேவன் உணரவைப்பார். இந்த தற்பரிசோதனையாகிய தன்னைத்தானே சோதித்து அறிந்து கொள்ளுதல் நம்மை விழுந்துபோகக்கூடிய சூழ்நிலைகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளும்.
இதனை சங்கீதம் 139:23-24 மிகவும் தெளிவாக நமக்க எடுத்துக் காட்டுகிறது. தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து என் சிந்தனைகளை அறிந்த கொள்ளும். பாவம் கொடியதுதான். அது நம்மை தேவனைவிட்டு பிரித்து விடுவதும் உண்மைதான். அதற்காக நாம் விழுந்த இடத்தில் கிடந்து அழிந்துபோக வேண்டிய அவசியம் இல்லையே. மறுபடியும் எழுந்து இருக்க நம்மால் முடியும். தேவ பிள்ளையாக வாழ முடியும். காரணம் நமது தேவனிடத்தில் இரக்கங்களும் மன்னிப்பும் உண்டு. இங்கு நாம் கவனிக்க வேண்டியது, இதனை நாம் சாதகமாக்கிக் கொள்வது மிகப்பெரிய அழிவை எமக்கு கொண்டுவரும். மீண்டும் மீண்டும் விழவேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆகவேதான் நாம் மேலே வாசித்த தற்பரிசோதனை முக்கியமானதாகும்.
இந்த 139ம் சங்கீதத்தை நாம் வாசிக்கும் போது, மிகப்பெரிய உண்மையை முதலில் நாம் அறியமுடியும். என்னை, என்னிடத்தில் என்ற சொற்கள் இரண்டு வகையான சிந்தனைகளை அல்லது, உணர்வுகளை தோற்றுவிக்கும். ஒன்று தேவனே என்னை ஆராய்கிறவர் என்ற உணர்வு. மற்றது நான் ஆராயப்பட வேண்டியவன் – வேண்டியவள் என்ற உணர்வு. இதுவரை காலமும் நாம் மற்றவர்கள் ஆராயப்பட வேண்டியவர்கள் என்றுதான் வாழ்ந்து வந்தோம். நானும் ஆராயப்பட வேண்டும் என்ற எண்ணம் எமக்குள் வரும்போது நான் சுயமாக ஆராயாமல், தேவ ஆவியின் துணையோடு எம்மை ஆராய இடம் கொடுப்போமானால் இந்த உண்மையை உணரமுடியும். அதாவது நாமும் ஆராயப்பட வேண்டியவர்கள் என்ற உணர்வு நமக்கு புலப்படும். இந்த உணர்வுக்கு (தற்பரிசோதனைக்கு) நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, கீழ்ப்படிகிறோமோ என்பதில்தான் எம் வாழ்கையின் நோக்கம் தங்கியுள்ளது.
தேவனுக்குப் பிரியமானவர்களே, நமது ஆண்டவர் நமது நிலைமைகளையும், பலங்களையும், பலவீனங்களையும் அறிந்தவர். ஆகவே அவர் நம்மை சோதித்து அறியட்டும். அவர் நம்மை சோதிப்பதையிட்டு நாம் பயப்படத் தேவையில்லை. அவர் சோதித்து அறியும்போது நம்மில் உள்ள குறைகள் நீங்குவது மட்டுமல்ல, நமக்கு வரக்கூடிய ஆபத்துக்களில் இருந்தும் தப்பித்துக்கொள்ள தேவன் உதவுவார். அகவே நாம் தேவனிடம் வேண்டுவோம், நான் மற்றவர்களால் சோதித்து அறியமுன் நீர் என்னை சோதித்து அறிந்து கொள்ளும் என. வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியில் என்னை நடத்தும்.
நாம் பாவிகள்தான். அதற்காக பாவம் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. பாவிகளானாலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இதனையே தாவீதின் ஜெபமும் எமக்கு வெளிப்படுத்துகிறது. என்னை ஆராயும். என் இருதயத்தை அறிந்து கொள்ளும். என்னை சோதியும். என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும். அதாவது தாம் ஆராயப்பட வேண்டிய சரியான இடத்தை (இன்று நமக்கு) சுட்டிக்காட்டியுள்ளார். இருதயத்தை ஆராய முதலில் ஒப்புக்கொடுக்கிறார். காரணம் அங்கே இருந்துதான் மறைவானவைகளை வெளியில் கொண்டுவரமுடியும். சுயதற்பரிசோதனை சிலவேளைகளில் எம்மை பலவீனப்படுத்தி விழுத்திவிடும். நாம் தேவனோடு சேர்ந்து செயற்படும்போது பலவீனத்தில் பலன் அடையமுடியும்.
அவர் தொடர்ந்து ஜெபிக்கிறார், வேதனை உண்டாக்கும் வழியண்டோ என்று பார்த்து நித்திய வழியில் நடத்தம் என. இங்கு நாம் கவனிக்க வேண்டியது, ஆராய்வதற்குப்பின் வழிநடத்தலை வாஞ்சிப்தை. இதுதான் முக்கியம். இந்த உண்மைதான் இயேசுவின் சிலுவை மரணத்தை தியானிக்கும் அல்லது நினைவுகூரும் ஒவ்வொரு வேளையிலும் நாம் சிந்திக்க வேண்டியது. எமக்காக தமது உயிரை பலியாக ஒப்புக்கொடுத்தவருக்கு என்ன கைமாறு நாம் கொடுக்க முடியும். எதுவும் தகுதியுமல்ல, கொடுக்கவும் முடியாது. நாம் ஒன்று செய்வோம், பாவத்தை வெறுத்து தூயவாழ்வு வாழவும், தேவனுடைய வழிநடத்தலைக் கேட்கவும் நாம் முயற்சிப்போம்.
தேவன் அந்த முயற்சியை ஆசீர்வதித்து உங்கள் அனைவரையும் காத்துக் கொள்வாராக!
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonipillai. Rehoboth Ministries – Praying for Denmark