அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 43 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்தநிலையில் கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதே போல டாஸ்மாக்கை திறக்கலாம் என்று நீதிமன்றம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால் சரக்கு கிடைத்தால் போதும் என்ற அளவிற்கு டாஸ்மாக்குகளில் கூட்டம் அலைமோதியது.
இந்தநிலையில், மது விற்பனையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அமல் படுத்தாததால், ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைளை திறப்பதற்கு தமிழகம் முழுவதும் தடை விதித்து நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தேவைப்பட்டால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு, வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் (‘டோர் டெலிவரி’) முறையை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதனால் 2 நாள் விற்பனைக்கு பிறகு மதுக்கடைகளை தமிழக அரசு இழுத்து மூடியது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள் என பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.