கொரோனா நிவாரணமாக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளேன்.
நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண உதவியாக ரூ.4 கோடி வரை வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
“கொரோனா நிவாரணமாக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளேன். அதில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.5,550 வீதம் வழங்கப்படுகிறது. நிறைய கலைஞர்கள் வெளியூர்களில் இருப்பதாகவும், ஊரடங்கினால் நேரில் வந்து நிவாரண உதவியை பெற இயலாது என்றும் தகவல் அனுப்பினர். நான் நடன இயக்குனர் தினேஷிடம் பேசியதற்கு இணங்க அனைத்து உறுப்பினர்கள் வங்கிக்கணக்கிலும் இந்த தொகை போடப்படும். எனவே யாரும் பணத்தை வாங்க நேரில் வரவேண்டாம்”.
இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் டுவிட்டரில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “எனது வாழும் அன்னைக்காக கட்டும் கோவிலை அன்னையர் தினத்தில் உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். கடவுள் தாய்க்குள்ளே இருப்பதை உணர்ந்துள்ளேன். தாயை சந்தோஷமாக வைத்துக்கொள்பவராகவும், மற்றவர்கள் பசியை போக்குபவராகவும் இருப்பவர்கள் வாழ்க்கையில் தோற்பது இல்லை. எனது மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருக்கும் தான்சேன் ஆசையை நிறைவேற்ற முன்வந்த விஜய்க்கும், அனிருத்துக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.