இன்று திங்கட்கிழமை (11) இயல்புவாழ்வைக் மீளக்கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய சகல அரசாங்க சேவைகளும் முழுமையாக செயல்படவேண்டியது அவசியமாகக் கருதப்படுகின்றது. இதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அரச பணிமனைகள் சகலதும் திறக்கப்பட்டு சுகாதாரத் துறையின் நிபந்தனைக்கமைய மக்களுக்கு முழுமையான சேவையை வழங்க செயற்படவிருக்கின்றது என மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா (08) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணி விசேட கூட்டத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் இதுவரை செயற்படாதிருந்த பிரிவுகளை மீளவும் செயற்படுத்துவதனூடாக மக்களின் இயல்பு வாழ்வினை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மாவட்டத்தில் இதுவரை காலமும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்கி வந்த அரச மற்றும் தனியார் சேவைகளை மீளவும் வழமைக்குக் கொண்டுவரும் நோக்கில் மாவட்ட மட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தனியார் மற்றும் அரச போக்குவரத்துச் சேவைகளை மட்டக்களப்பிலிருந்து அம்பாரை மற்றும் திருகோணமலைக்கும் விஸ்தரிப்பது என இந்த செயலணிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மட்டக்களப்பிலிருந்து அம்பாரை, திருகோணமலை போன்ற பிரதேசங்களுக்கும், மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்து மட்டக்களப்பிற்கும் கடமைக்கு வரும் அரச, தனியார் சேவையினருக்கும் வசதி கிட்டியிருக்கின்றது.
எனினும் போக்குவரத்தில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருப்பதுடன் சமுக இடைவெளியினைப் பேணவேண்டும். குறிப்பிட்ட தொகையினர் மாத்திரமே அரச அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களின் கடமைக்காக அனுமதிக்கப்படுவர்.
மேலும் மக்கள் அவசிய தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் வரும் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் பேணவேண்டும் என அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பொதுமக்களைக் இங்கு கேட்டுக்கொண்டார்.
உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மீளவும் திறக்கப்படுவதுடன் பொதுமக்கள் உணவுப் பொருட்களையும், குடிபானங்களையும் வெளியில் கொண்டு சென்றே அருந்துபவர்களாக இருக்கவேண்டும்.
பொலனறுவை மாவட்டத்திலிருந்து வருகைதந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் தாம் வழமையாகப் பயன்படுத்தி வரும் போக்குவரத்தினை தொடர்ந்தும் பயன்படுத்தலாமென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்தில் மேலதிக அர சாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பிரதிநிதி தெற்றா நோய் தடுப்புப் பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் ஆர். நவலோஜிதன், இரணுவத்தின் 23வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.ஜீ.டீ.என். ஜயசுந்தர உட்பட செயலணியின் பலபிரிவு அதிகாரிகள், இராணுவ மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்