நடிகர் விஜய் சேதுபதி கோவில்களில் அபிஷேகம் செய்வது குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டு இருந்தார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகன் இடத்தை பிடித்துள்ள விஜய் சேதுபதி, சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது, கோவில்களில் அபிஷேகம் செய்வது குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை தற்போது சிலர் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர்.
இதையடுத்து இந்து கடவுள்களுக்கு எதிராக அவர் பேசி இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின. விஜய் சேதுபதி மீது இந்து அமைப்பு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு எதிராக விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், “விஜய்சேதுபதி ஒரு வருடத்துக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது கிரேசி மோகன் சொன்ன நகைச்சுவை துணுக்கை மறுபதிவு செய்திருந்தார். அப்படி யதார்த்தமாக சொன்னதை மாற்றி இந்துக்களுக்கு எதிராக பேசியதாக அந்த காணொலியை எடிட் செய்து சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவதூறாக பதிவிடுகிறார்கள். அந்த பதிவுகளையும், காணொலியையும் நீக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது. இந்த சர்ச்சை திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.