கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள லாக்டவுனின் 3-வது கட்டம் இந்த வாரத்தில் முடியவுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார்.
முதல் இரு கட்ட லாக்டவுன் அறிவிக்கும்போதும் மக்களிடம் நேரடியாக உரையாற்றி அறிவித்த பிரதமர் மோடி 3-வது கட்ட லாக்டவுனின்போது மத்திய அரசு அறிவிப்போது நிறுத்திக்கொண்டது.
ஆனால், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு தொடர்பாகவும் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி தொடர்ந்து சீரான இடைவெளியில் ஆலோசனைகள் நடத்தி கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறார். கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் மற்றும் 27-ம் தேதிகளில் ஆலோசனை நடத்தி முதல்வர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
அதன்படி 3-வது கட்ட லாக்டவுன் வரும் 17-ம் தேதி முடிவதையடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். ஏறக்குறைய 6 மணிநேரத்துக்கும் மேலாக இந்த ஆலோசனை நடந்தது. இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான முதல்வர்கள் லாக்டவுனைத் தளர்த்தும் முடிவை மாநில அரசுகள் கைகளில் ஒப்படையுங்கள் தாங்கள் முடிவு செய்துகொள்கிறோம் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த 3 லாக்டவுன் போன்று கட்டுப்பாடுகள் 4-வது லாக்டவுனில் இருக்காது எனத் தெரிவித்துள்ளார். ஆனால் லாக்டவுனை முழுமையாக ரத்து செய்யும் முடிவோடு அவர் பேசவில்லை என மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளோடு பொருளாதார நடவடிக்கைகளும் சேர்ந்து தொடங்க வேண்டும் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், மகாராஷ்டிரா, தெலங்கானா, பஞ்சாப், மேற்கு வங்க மாநில முதல்வர்கள் லாக்டவுனை நீட்டிக்கக் கோரியுள்ளனர். பல முதல்வர்கள் லாக்டவுனில் தளர்வுகள் இருக்க வேண்டும், கரோனா மண்டலங்களை பிரிப்பதை மாநில அரசுகள் கையில் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டனர்.
மேலும், மாநிலங்களுக்கு இடையே பேருந்துப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து இயக்கும் முன் மாநில அரசுகளைக் கலந்தாய்வு செய்யாமல் முடிவு செய்யக்கூடாது என சத்தீஸ்கர், கர்நாடகா, ஆந்திரா, பிஹார், தமிழக முதல்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் லாக்டவுனை எவ்வாறு படிப்படியாகத் தளர்த்துவது குறித்து மாநில முதல்வர்கள் செயல்திட்டத்தை தயாரித்து அனுப்பவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஆதலால், இன்றைய உரையில் 3-வது லாக்டவுன் முடிந்த பின் அடுத்த கட்டமாக மக்களிடம் என்ன அரசு என்ன எதிர்பார்க்கிறது, லாக்டவுன் குறித்த அறிவிப்பு போன்றவற்றை பிரதமர் மோடி பேசலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.