ஊரடங்கு விடுமுறையில் அப்பா டி.ராஜேந்தருக்கும், அம்மா உஷா ராஜேந்தருக்கும் விதவிதமாக, சிம்பு வகை வகையாக சமைத்துப் போட்டு இருக்கிறார்.
தமிழ் திரையுலகை சேர்ந்த பெரும்பாலான நடிகைகளுக்கு சமையல் நன்றாக தெரியும். பழம்பெரும் கதாநாயகியான சவுகார் ஜானகி, சமையல் கலையில் தேர்ந்தவர். அவரை, ‘சமையல் ராணி’ என்றே அழைப்பார்கள். இவருக்கு ஓட்டல் நடத்திய அனுபவமும் உண்டு. இவரைப்போல் ராதிகா சரத்குமார், குஷ்பு, சுஹாசினி, மீனா, ரோஜா, ரேகா ஆகியோரும் சமையல் தெரிந்த நாயகிகள்.
சமையல் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் நடிகைகளும் இருக்கிறார்கள். சாப்பாட்டுக்கு கூட, சமையலறை பக்கம் ஒதுங்காத அந்த நடிகைகள், ‘கொரோனா மற்றும் ஊரடங்கு புண்ணியத்தில் சமையல் கற்றுக்கொண்டார்கள்’.
அவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, காஜல் அகர்வால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கியமானவர்கள். நடிகர்களில் சமையல் கலையில் தேர்ந்தவர், அஜித்குமார் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். அவரை, ‘நள மகாராஜா’ என்று நெருங்கிய நண்பர்கள் அழைப்பார்கள். அஜித் கையினால் சமைத்த பிரியாணியின் வாசனையையும், ருசியையும் அதை சாப்பிட்டவர்களால் மறக்க முடியாதாம். அத்தனை ருசி!. ஆர்யா, விஷால், சூரி ஆகிய மூன்று பேருக்கும் நன்றாகவே சமைக்க தெரியுமாம்.
இந்த பட்டியலில் புதுசாக சேர்ந்திருப்பவர், சிம்பு!. இவருக்கு ருசியாக சமைக்க வருமாம். ஊரடங்கு விடுமுறையில் இவர் அப்பா டி.ராஜேந்தருக்கும், அம்மா உஷா ராஜேந்தருக்கும் விதவிதமாக, வகை வகையாக சமைத்துப் போட்டு இருக்கிறார். “சைவம் மற்றும் அசைவம் இரண்டையும் மிக ருசியாக சமைப்பதில் தேர்ந்தவர், சிம்பு. அந்த வகையில், சிம்புவின் வருங்கால மனைவி கொடுத்து வைத்தவர்தான்” என்கிறார்கள் அவர்களின் நண்பர்கள்!.