பிரபல ஹாலிவுட் நடிகர் மேட் டேமன் மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பும், பலியும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அங்கு 14 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றுநோய்க்கு ஆளாகி உள்ளனர். சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காத நிலையில், ஏறத்தாழ 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது நெஞ்சை பதற வைத்துள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் அமெரிக்க அரசு திணறி வருகிறது.
இந்நிலையில் தனது மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக பிரபல ஹாலிவுட் நடிகர் மேட் டேமன் தெரிவித்துள்ளார்.
‘தி லாஸ்ட் டூயல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக குடும்பத்தோடு அயர்லாந்து டப்லின் நகரில் இருந்தார் மேட் டேமன். அப்போது அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தலால் கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மேட் டேமனால் அமெரிக்கா திரும்பமுடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், மேட் டேமனின் மகளான அலெக்ஸியா மட்டும் அயர்லாந்து செல்லாமல் நியூயார்க்கிலேயே இருந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மேட் டேமன் கூறியிருப்பதாவது:
”எனது மகள் அலெக்ஸியா நியூயார்க் நகரில் இருக்கிறார். அவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது உடன் தங்கி இருக்கும் தோழிகளின் உதவியால் தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்.
இந்த மாத இறுதியில் நாங்கள் மீண்டும் அவரோடு இணைவோம். நாங்கள் அனைவரும் நன்றாக இருக்கிறோம். என் அம்மாவும், என் மனைவியின் அம்மாவும் கூட நன்றாக இருக்கிறார்கள். இந்த கொரோனா வைரஸ் முதியவர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலானது என மேட் டேமன் கூறியுள்ளார்.
மேட் டேமன். 1997-ல் வெளியான குட் வில் ஹண்டிங் என்கிற படத்துக்குத் திரைக்கதை அமைத்ததற்காக பென் அஃப்லெக்குடன் இணைந்து ஆஸ்கர் விருதைப் பெற்றார். சேவிங் பிரைவேட் ரையன், தி டிபார்டட், தி போர்ன் ஐடண்டிடி, கண்டஜியன் போன்ற பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 2005-ல் லுசியானாவைத் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
—–
கொரோனா உயிர்ப்பலிகளால் உலக நாடுகள் கதி கலங்கி நிற்கின்றன. ஹாலிவுட் முதல் அனைத்து மொழி பட உலகமும் முடங்கி கிடக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் படங்களை இணையதளங்களில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஆஸ்கார் விருதுக்கு இணையதளத்தில் வெளியாகும் படங்கள் அனுமதிக்கப்படும் என்று விதிகளை தளர்த்தி ஆஸ்கார் குழு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு முன்பு தியேட்டர்களில் திரையிட்ட படங்கள் மட்டுமே ஆஸ்காருக்கு தகுதி பெற்றன.
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 21-ந்தேதி ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற இருந்தது. தற்போது கொரோனாவால் விருது வழங்கும் விழாவை நான்கு மாதங்கள் தள்ளி வைத்து ஜூன் அல்லது ஜூலையில் நடத்த முடிவு செய்து இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
கொரோனா அச்சுறுத்தலால் பல ஹாலிவுட் படங்களின் ரிலீசை அடுத்த வருடத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். இதனாலேயே விருது வழங்கும் விழா தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. ஆஸ்கார் விருது வரலாற்றில் கடந்த 93 ஆண்டுகளில் ஆஸ்கார் விருது விழா தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.