முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் கிளிநொச்சி பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
நேற்றுக் காலை 10 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இருவரிடமும் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.
தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் நடைபெற்ற மகளீர் தின நிகழ்வில் அன்னை பூபதியின் உருவப்படத்துடன், விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளின் புகைப்படங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே மேற்படி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
——-
தமிழின விடுதலைக்கு வித்துடல் விதைத்த மக்கள் ஆத்மசாந்திக்காக அனைத்து மக்களும் எதிர்வரும் 18ஆம் திகதி அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அழைப்புவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
அடக்கு முறைக்கு அடங்க மறுத்து எழுச்சி கொண்ட தமிழ் இளைஞர் சமுதாயத்திலிருந்து எழுந்த ஆயுதவழிப் போர் மூன்று தசாப்தங்களையும் கடந்து சர்வதேசம் வரை எட்டி நின்றது. சர்வதேச அனுசரணையுடன் இலங்கை அரசுக்கும் – தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையே 2002ல் போர் நிறுத்தமும் இலங்கைத் தமிழர் தேச மக்கள் விடுதலைக்குப் பேச்சுக்களும் உடன்பாடுகளும் நோர்வே ஒஸ்லோ நகரில் நடைபெற்றது.
ஜனநாயக சக்திகளும் போராட்ட சக்திகளும் ஒன்றுபட்டு உயர்ந்து நின்றன.
தமிழர் உச்ச பலம் வெற்றியின் விளிம்பில் மீண்டும் ஏமாற்றம் – மீண்டும் மூண்டது போர். சர்வதேச சந்தர்ப்பம் தடுமாறிய நிலையில் 2009 மே 18ல் தாயக மண்ணில் இலட்சக்கணக்கில் எம் தமிழ் மக்கள் விடுதலைக்கு வித்துடலங்களாய் வீழ்ந்தனர்.
அந்த உச்ச விடுதலை விளைநிலத்தின் அடையாளம் தான் முல்லையில் முள்ளிவாய்க்கால் முற்றம். அங்கும் விடுதலை வேண்டிய ஆத்மாக்களுக்கு அஞ்சலி நினைவேந்தல் சுடரேற்றம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் ஒன்று கூடுவதற்கு கட்டுப்பாடுகளுண்டு. அஞ்சலிப்போர் முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும். திரளாக மக்கள் நடமாடுவது தவிர்க்கப்படுதல் வேண்டும். மருத்துவ நிபுணர் அமைப்புக்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியே நடத்தல் வேண்டும்.
210 நாடுகளில்கொவிட்–19 வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. இலங்கையிலும் அதேநிலமைகள்தான். ஆயினும் மே18ஆம் நாளை நாம் நினைவு கூர்ந்தேயாக வேண்டும். அடக்குமுறை, ஒடுக்குமுறைக்குள்ளான ஒரு இனம் தங்கள் தேசத்தின் விடுதலைக்காக விடிவுக்காகத் திடசங்கற்பங் கொண்ட மக்கள் இலங்கையிலும், உலகில் எங்கிருந்தாலும் மே 18ஆம் நாளை நெஞ்சில் நிறுத்தி அஞ்சலி செலுத்தவேண்டும். 18.18.18 மணி நேரத்தில் அந்த அஞ்சலியை நிறைவு செய்ய வேண்டும் என்று ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
——-