தமிழகத்தைப் போல கேரளாவிலும் திரைப்படங்களின் நேரடி ஓடிடி வெளியீடு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்கள் அத்தனையும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக திரையரங்குகள் மூடப்பட்டு மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலை உருவாகியுள்ளதால் சில தயாரிப்பாளர்கள் ஊரடங்கால் வெளியாக முடியாமல் போன தங்களின் திரைப்படங்களை நேரடியாக டிஜிட்டல் வெளியீடாக ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிட முனைந்துள்ளனர். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவரங்கள் கடந்த 2-3 வாரங்களாக செய்திகளாக உலவி வந்தாலும் வெள்ளிக்கிழமை காலை அமேசான் ப்ரைம் தளம் அதிரடியான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இதில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என மொத்தம் 7 படங்கள் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியிடப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பெண்குயின்’ ஆகிய படங்கள் ப்ரைமில் வெளியாகின்றன.
மலையாளத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ் ஹைதரி நடித்திருக்கும் ‘சூஃபியும், சுஜாதையும்’ என்ற படம் வெளியாகிறது. ஆனால் இப்படி நேரடியாக வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கேரளாவின் திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் லிபர்டி பஷீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“ஒட்டுமொத்தமாக ஒரு துறை நெருக்கடியைச் சந்திக்கும் போது, ஒரு சிலர் தங்களின் சுயநலத்துக்காக, டிஜிட்டல் வெளியீடு மூலமாக மாற்று சந்தையை உருவாக்குவது சரியல்ல. இப்படி திரையரங்கைத் தாண்டி ஒரு படத்தை வெளியிட வேண்டும் என்று முயற்சித்தால் ஜெயசூர்யா மட்டுமல்ல, பெரிய நடிகர்களும் தடை செய்யப்படுவார்கள்” என்று பஷீர் ஒரு இணையதளத்துக்குக் கொடுத்த பேட்டியில் பேசியுள்ளார்.
முன்னதாக வியாழக்கிழமை அன்று அமிதாப் பச்சனின் ‘குலாபோ சிதாபோ’ திரைப்படம் ப்ரைமில் நேரடியாக வெளியாவது குறித்து பிரபல மல்டிப்ளெக்ஸ் தரப்பு அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
—–
திரைப்படங்கள் திரையரங்க வெளியீட்டைத் தாண்டி நேரடியாக ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியிடுவது தங்கள் தர்பபு ஏமாற்றம் அளிக்கிறது என பிவிஆர் பிக்சர்ஸின் தலைமை செயல் அதிகாரி கமல் கியான்சந்தானி கூறியுள்ளார்.
கரோனா நெருக்கடி காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்கள் அத்தனையும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக திரையரங்குகள் மூடப்பட்டு மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலை உருவாகியுள்ளதால் சில தயாரிப்பாளர்கள் ஊரடங்கால் வெளியாக முடியாமல் போன தங்களின் திரைப்படங்களை நேரடியாக டிஜிட்டல் வெளியீடாக ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிட முனைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை அமேசான் ப்ரைம் தரப்பு, தங்கள் தளத்தில் 7 புதிய திரைப்படங்கள் நேரடியாக வெளியாகவுள்ளது என அதிரடியாக விளம்பரம் செய்தது.
இதற்கு இந்தியாவின் மிகப்பெரிய மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்களில் ஒரு நிறுவனமான பிவிஆர் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்துப் பேசிய பிவிஆர் பிக்சர்ஸின் தலைமை செயல் அதிகாரி கமல் கியான்சந்தானி, “சில தயாரிப்பாளர்கள் நேரடியாக ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியிடுவது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் ஸ்ட்ரீமிங் தளங்களில் திரைப்படங்கள் வெளியாவது இது முதல் முறை அல்ல. கடந்த பல வருடங்களாகவே திரையரங்க வெளியீடு, வளர்ந்து வரும் புதிய தளங்களால் தொடர்ந்து போட்டியை சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது.
தொடர்ந்து சினிமா ரசிகர்களின் ஆதரவையும் அன்பையும் பெற்று வருகிறது. திரையரங்குகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள, அதற்கு ஏற்றவாறு தங்கள் திரைப்படஙகளின் வெளியீட்டை ஒத்திவைத்துள்ள அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நாங்கள் நன்றி கூற விரும்புகிறோம்” என்றார்.
முன்னதாக வியாழக்கிழமை அன்று அமிதாப் பச்சனின் குலாபோ சிதாபோ திரைப்படம் ப்ரைமில் நேரடியாக வெளியாவது குறித்த அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து து பிரபல மல்டிப்ளெக்ஸ் நிறுவனமான ஐநாக்ஸ், அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
——-
அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் ‘பிங்க்’ இயக்குநர் ஷூஜித் சிர்கார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குலாபோ சிதாபோ’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஸ்ட்ரீமிங் சேவையில் ஜூன் 12 அன்று நேரடியாக வெளியாகிறது. இதை படக்குழுவினர் நேற்று உறுதி செய்திருந்தனர்.
இந்நிலையில் ‘குலாபோ சிதாபோ’ படக்குழுவினரின் இந்த அறிவிப்புக்கு ஐநாக்ஸ் திரையங்க குழுமம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஐநாக்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தங்கள் படத்தை திரையரங்கில் வெளியிடாமல் ஆன்லைனில் வெளியிடுவது குறித்து ஒரு தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பை பற்றி ஐநாக்ஸ் நிறுவனம் கடும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்த விரும்புகிறது. அந்த தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அறிவிப்பு உலகளாவிய திரைப்பட வெளியிடலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி.
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கங்களுக்கும் எப்போதும் ஒரு பரஸ்பர புரிதல் இருந்தே வந்துள்ளது. இதில் ஒருவருடைய நடவடிக்கைதான் இன்னொருவரது வருவாய்க்கு வழிவகுக்கும். நல்ல படங்கள் அதிகமான வரவேண்டும் என்பதற்காக நாடு முழுக்க உலகத் தரம் வாய்ந்த திரைகளை ஐநாக்ஸ் நிறுவியுள்ளது. பல்லாண்டுகாலமாக நீடித்து வரும் இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் உதவி வந்துள்ளது. ஒருவரோடு ஒருவர் தோள் நின்று திரைத்துறையை மீட்டெடுக்க வேண்டிய இந்த நேரத்தில் சில பங்குதாரர்கள் இந்த பரஸ்பர உறவுமுறையில் ஆர்வமில்லாமல் செயல்படுவது வருத்தமாக உள்ளது.இது போன்ற நடவடிக்கைகள் மூலம் வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக இருக்கவேண்டிய தயாரிப்பாளர்கள், ஆபத்தில் உதவாத நண்பர்களாக மாறுகிறார்கள். இது போன்ற நண்பர்களால் ஐநாக்ஸ் நிறுவனம் தன்னுடைய தேர்வுகளை ஆராய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறது.
அனைத்து தயாரிப்பாளர்களையும் திரையரங்க வெளியிடலை தவிர்க்காமல், பழைய நடைமுறையையே தொடருமாறு வலியுறுத்துகிறது. அதுவே இந்த சங்கிலி தொடரில் இருக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் நல்லது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.