குறிப்பு : ஒவ்வொரு ஆக்கத்திற்கும் படைப்பாளிகளே பொறுப்பு அலைகள் அல்ல..
உன்னை மறவாமல் நினைக்கும் தேவன்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
சீயோனோ, கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள். ஸ்திhPயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன். உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது. ஏசாயா 49:14-16.
கர்த்தர் அன்புள்ளவர், தயவு உள்ளவர், காருண்யம் உள்ளவர். மட்டுமல்ல, அளவற்ற மனதுருக்கம் உள்ளவர். அவர் நம்மை நினைத்திருக்கிறார். பத்திரிகையில் நாளந்தம் வெளிவரும் செய்திகளில் முக்கியமானது போரின் விளைவால் ஏற்பட்ட துயரமான வாழ்கை பற்றியதாகும். நான் வாழும் டென்மார்க்கில் வீடற்று வீதிகளில் தங்கியிருக்கும் எனது முன்னாள் தொழில் நண்பர் ஒருவருக்கு எனது தகப்பனாரின் நினைவு நாளை முன்னிட்டு உதவிசெய்ய முன்வந்தேன். அன்று இன்னுமொரு வயதான டெனிஸ் பெண்ணும் அவருக்கு உதவி செய்ய முன் வந்தார்கள். நாம் இருவரும் கூறியது, தேவனைத்தேடு வாழ்க்கைமாறும் என்பதாகும். அவனோ இந்த வாழ்க்கை எனக்குப் போதும் என்றான். அப்பொழுது அந்த வயதான பெண்கூறியது, இனிமேல் கைவிடப்பட்டுள்ளேன் எனக்கூறாதே என்றார்கள். இந்த அனுபவத்தை வைத்து இந்த சிந்தனையை எழுதுகிறேன்.
இன்று அநேகம்பேர் கடவுள் என்னை கைவிட்டார். இறைவன் என்னை மறந்தார் என்று சொல்லி புலம்புகிறார்கள். ஒருசில வேளைகளில் நாமும்கூட. ஆனால் நமது ஆண்டவராகிய தேவன் அதை முற்றிலும் இல்லை இல்லை என்று மறுத்து மேலே உள்ள வாக்குத்தத்தத்தை – வாக்குறுதியை நமக்குத் தந்தருளுகிறார்.
நாம் வாழும் உலகத்தில் அன்றாடம் காணும் பலகாட்சிகள், சம்பவங்கள் எமக்கு பல காரியங்களை நினவுபடுத்துகின்றது. ஆனால் அவற்றைக் குறித்து ஒருபோதும் நாம் சிந்திப்பதில்லை. காரணம் அவைகள் எமக்கு என்னத்தை விளக்குகிறது என்பது அவசியமில்லை என நாம் நினைப்பதுதான். இன்று அன்பு குறைவினால் பல போராட்டங்கள், அழிவுகள், சுய நலங்களினால் வரும் சோர்வுகள் என பலவற்றை நாம் கூறலாம். இதன் காரணத்தால் பலர் கைவிடப்பட்டுப் போவதை நாம் காணக்கூடியதாக உள்ளது.
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் கைவிடப்படலாம். பெற்றோர் பிள்ளைகள் கைவிடப்படலாம். வியாதிஸ்த்தரை டாக்டர்கள் கைவிடலாம். நண்பர்கள் உறவினர்கள் உதவி செய்வேன் என்றவர்கள்கூட கைவிடலாம். ஆனால் நம்மைப் படைத்த கர்த்தர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.
இன்று பல வெளிநாட்டுப் பெண்கள் வயோதிபர் இல்லங்களில் பணிபுரிகின்றனர். அவர்களிடம் கேட்டால் இதன் உண்மையை அறியமுடியும். எத்தனையோ வயோதிபர்கள் தங்களை பிள்ளைகள், உறவினர்கள் வந்து தம்மைப் பார்ப்பதும் இல்லை, நான் மறக்கப்பட்டவளாக, மறக்கப்பட்டவனாக வாழ்கிறேன் என்று புலம்புவதை.
உலகம் அன்புக்காக ஏங்குகிறது. நமது ஆண்டவராகிய கர்த்தரோ, நான் உன்னைவிட்டு விலகுவதுமில்ல, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று உடன்படிக் கை செய்திருக்கிறார். அத்துடன் உலகத்தின் முடிவுபரியந்தம் சகலநாட்களிலும் அவர் எங்களுடனேகூட இருக்கிறவர்.கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார். சங்கீதம் 115:12.
யார் யாரை அவர் நினைத்திருக்கிறார்? யார் யாரை அவர் ஆசீர்வதிப்பார்?
சிறுமைப்பட்டவர்களை நினைத்திருக்கிறார்.
நினைப்பது வேறு, நினைவாக இருப்பது வேறு. நினைப்பது என்பது எப்போதாவது ஒருமுறை ஞாபகத்திற்கு வருவது. ஆனால் நினைவாக இருப்பது என்பது தொடர்ச்சியாக இடைவிடாமல், நினைத்துக்கொண்டே, சிந்தித்துக்கொண்டே, எண்ணிக்கொண்டே இருப்பதாகும். இறுதியுத்தத்த காலத்தில் நாம் அனைவரும் உறவினரை நினைத்து எவ்வாறு செயற்பட்டோம். அங்கே அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்று அவர்களை எப்போதும் நினைத்திருந்தோம்.
கர்த்தரும் அப்படித்தான் நம்மேல் நினைவாக இருக்கிறார். நாம் சிறுமையும் எளிமையுமானவர்கள் தான். ஆனாலும் கர்த்தர் நம்மேல் நினைவாக இருக்க நாம் எம்மாத்திரம்? இதனை தாவீது இவ்வாறு கூறுகிறான். நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார். சங். 40: 17.
கீழ்ப்படிகிறவர்களை நினைத்திருக்கிறார்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மக்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிய வில்லை. அதனால் தேவகோபம் பூமிமேல் வந்தது. இரவும் பகலும் 40 நாட்கள் தொடர்ந்து மழை. வெள்ளத்தால் அழிவை பூமி கண்டது. ஆனால் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்த நோவாவையும், அவன் குடும்பத்தையும், அவனுடன் பேழையில் இருந்த மிருகங்களையும் தேவன் நினைத்தருளினார். ஆதி. 8:1. (ஆதி. 7, 8, 9ம் அதிகாரங்களை வாசித்து அறிந்து கொள்ளவும்). வேதம் மிகத்தெளிவாக எமக்குத் தெரிவிக்கிறது. கர்த்தர் நோவாவை நோக்கி, நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள், இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். ஆதி.7:1.
ஆபிரகாம் தேவனுடைய சத்தத்திற்கு கீழ்படிந்து நடந்தபடியால், பலவித சோதனைகள் வந்த போதும் தேவன் அவருடன் இருந்து நினைத்து காத்து வந்தார். நாமும் தேவனுடைய சத்தத்திற்கு, தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தால் தேவன் எம்மையும் நினைத்தருளுவார். காத்துக்கொள்வார்.
ஜெபிக்கிவர்களை நினைத்திருக்கிறார்.
இதற்கு பல உதாரணங்களை வேதத்தில் இருந்தும், உங்களை சூழவுள்ள தேவனை அண்டி வாழ்பவர்களிடமும் அறிந்து கொள்ளலாம். மேலும் ஒரு சில உதாரணங்களை அறியத்தருகிறேன். சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன். அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள். 1சாமுவேல் 1:11.
குழந்தையற்ற பெண் தேவனிடம் இவ்வாறு வேண்டுதல் செய்தாள். தேவன் அவளின் ஜெபத்தைக் கேட்டு ஒரு ஆண் குழந்தையை கொடுத்தார். சிலநாள் சென்ற பின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள். (1 சாமுவேல் 1ம் அதிகாரம் முழுவதையும் வாசிக்கவும்) நாமும் தேவனை நோக்கி வேண்டுதல் செய்யும்போது அவர் அதனைக்கேட்டு அதற்கான பதிலை நமக்குத் தருவார்.
தம்மைப் பின்பற்றுகிறவர்களை நினத்திருக்கிறார்.
இயேசுவை அவரது சீடர்கள் பின்பற்றி வந்தார்கள். பலதடவை பயங்கரங்கள், சோதனைகள், கலக்கங்கள் வந்தன. தேவன் அவர்களை நினைத்தருளி அவர்களை அழிவில் இருந்து காத்து வந்தார். அத்துடன் அவர்களின் சகலகுறைவுகளையும் நீக்கி வாழவைத்தார். மரணவேளை வந்தபோதும் தனியாக அவர்களை வைக்கவில்லை. மரணத்திற்குப் பின்னும் பரலோகம் சென்ற பின்பும் தனிமையாக அவர்களை வாழ விடாமல், பரிசுத்த ஆவியை அனுப்பி வல்லமையுடன் வாழ வழி செய்தார்.
அதே தேவன் உங்களையும் மறந்து விடவில்லை. அவரே தேவனுடைய வலது பாரிசத்தில் எப்போதும் நமக்காக பரிந்து பேசிக்கொண்டு இருக்கிறார். நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே. உன்னை மறவாமல் நினைத்திருக்கும் அந்த அன்பான தேவனை உன் உள்ளத்தில் வாசம் பண்ண அழைக்கிறாயா? அப்படியாயின் இந்த ஜெபத்தை என்னுடன் சேர்ந்து தேவனிடம் ஒப்புவி.
அன்பான இயேசு சுவாமி, இதுவரை காலமும் எங்களை மறவாமல் நினைத்திருக்கும் ஓர் தேவன் உண்டென்பதை அறியாமல் வாழ்ந்ததற்காக என்னை மன்னியும். இன்றிலிருந்து அந்த தேவனை அறிந்து, எனது மீட்பராக என் உள்ளத்தில் வாழ உம்மை அழைக்கிறேன். இன்றிலிருந்து அவர் என்னை ஆண்டு வழி நடத்தும் படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark