நடிகை ஆண்ட்ரியா 40 நாட்கள் நடுகாட்டுக்குள் தங்கியிருந்து படப்பிடிப்பில் பங்கேற்றார்.
ஆண்ட்ரியா நடித்த ‘கா’ படக்குழுவினர் நடுக்காட்டுக்குள் 40 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பு நடத்தி விட்டு திரும்பியிருக்கிறார்கள். இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் நாஞ்சில் கூறியதாவது:-
“கா என்றால் காடு என்று அர்த்தம். காட்டுக்குள் நடக்கிற கதை. இதில் ஆண்ட்ரியா வனவிலங்குகளை படம் எடுக்கும் போட்டோகிராபராக நடித்து இருக்கிறார். அவர் நடுக்காட்டுக்குள் தங்கியிருந்து போட்டோ எடுக்கும்போது, ஒரு குற்றம் நடப்பதை பார்த்து விடுகிறார். அதன் விளைவுகள்தான் திரைக்கதை. சலீம்சவுத்ரி வில்லனாக நடித்து இருக்கிறார்.
“ஆண்ட்ரியாவிடம் நான் கதை சொல்ல புறப்பட்டபோது, அவர் ரொம்ப ‘செலக்டிவ்’ ஆக இருப்பார்…அவரிடம் கதை சொல்லி எளிதில் சம்மதம் வாங்க முடியாது என்று சில நண்பர்கள் சொன்னார்கள். நான் அரைமனதோடுதான் சென்றேன். அவரை நேரில் பார்த்தபோது, நான் கற்பனை செய்த பிம்பத்துக்கும், உண்மையான ஆண்ட்ரியாவுக்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது.
அவர் ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். நடித்துதான் சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாதவர். கதையை முழுமையாக கேட்டார். முடிவில், சம்மதம் சொன்னார். இந்த படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது. தலக்கோணம், மூணாறு ஆகிய இரண்டு காடுகளிலும் படப்பிடிப்பை நடத்தினோம்.
நான் ஒரு புது டைரக்டர் என்று என்னை ஆண்ட்ரியா அலட்சியமாக நடத்தவில்லை. நிறைய ஒத்துழைப்பு கொடுத்தார். மூணாறு காட்டில் படப்பிடிப்பு நடத்தியபோது, அட்டை பூச்சிகள்தான் பெரும் சவாலாக இருந்தது. தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் அனைத்து சவுகரியங்களையும் செய்து கொடுத்து, எங்களை பாதுகாப்பாக கவனித்துக்கொண்டார்.”