ஒரே மாதிரியான படங்களிலேயே நடிப்பதற்குப் பிடிக்கவில்லை என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோதிகா. அப்போது படத்தின் கதைக்களம், 2டி நிறுவனம், கதையின் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பதிலளித்தார் ஜோதிகா.
அதில், “புதுமுக இயக்குநர்களின் படங்களிலேயே அதிகமாக நடிப்பது ஏன்” என்ற கேள்விக்கு ஜோதிகா கூறியதாவது:
“புதுமுக இயக்குநர்களோடு பணிபுரிவது சவாலானது. ரொம்ப புதிதான கதைக்களம் எழுதுவார்கள். இந்த இடத்தில் பாட்டு வர வேண்டும், க்ளைமாக்ஸ் காட்சியில் கைதட்ட வேண்டும் என்ற ஒரு வரையறையில் எழுதமாட்டார்கள். ஒரு வசனத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள். தேவையில்லாத காமெடிக் காட்சிகள் இருக்காது.
புதுமுக இயக்குநர்களின் எண்ண ஓட்டமே வித்தியாசமாக இருக்கிறது. எனக்கும் ஒரே மாதிரியான படங்களிலேயே நடிப்பதற்குப் பிடிக்கவில்லை. ஆகையால் புதுமுக இயக்குநர்களோடு பணிபுரிவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்களும் கதையில் என்ன இடத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பதை நேரடியாக ரொம்பத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை திரைக்கதை எப்போதுமே புதுமையாக இருக்க வேண்டும் என நினைப்பேன். ஒரு படத்தை அனைவருமே விரும்பிப் பார்க்க வேண்டும் என்று விரும்புவேன். படம் பார்க்கும் ரசிகர்கள் யாருமே போராக நினைக்கக் கூடாது. அது டாக்குமென்ட்ரி மாதிரி இருக்கக் கூடாது”.
இவ்வாறு ஜோதிகா தெரிவித்துள்ளார்.