தேனீக்களிடம் இருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது என நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
இந்தியாவில் ஊரடங்கு காரணமாக 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி கூறியிருந்தது. ஊரடங்கு, வேலை இழப்பு, சமூக இடைவெளி ஆகியவை காரணமாக, இந்தியாவில், கோடிக்கணக்கான உள்நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டியதாகி விட்டது. எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளே, கொரோனா பரவலுக்கும் காரணமாக அமைந்து விட்டது.
குறிப்பாக, இந்தியாவில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடை அமலுக்கு வருவதற்கு முன்பு, ஓரிரண்டு நாட்களில், சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் தொழிலாளர்கள், நகரங்களில் இருந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு சென்று விட்டனர் என அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருந்தது.
புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்களில் இருந்து அவர்களை பாதுகாக்க சுகாதார பணிகளில் அவர்களை ஈடுபடுத்தலாம். வங்கிக்கணக்கில் பணம் போடலாம். இதர சமூக திட்டங்களை பயன்படுத்தி உதவலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கான இறுதி கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி மந்திரி இன்று வெளியிட்டார். அவர் கூறும்பொழுது, வேலைவாய்ப்புக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதியானது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதனால், சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, அவர்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரிக்க இந்த நிதி உதவும். புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு சேர்க்க உதவும் ஷ்ரமிக் சிறப்பு ரெயில்களுக்கான 85 சதவீத செலவை மத்திய அரசு ஏற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், நடிகை ஆண்ட்ரியா புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நேற்று காலை கண்விழித்த போது என் ஜன்னலுக்கு வெளியே சில தேனீக்களை காணமுடிந்தது. வெளியே சென்று பார்த்தபோது என் வீட்டு பால்கனியின் அருகே உள்ள மாமரத்தில் இந்த மிகப்பெரிய தேன் கூட்டை கண்டேன்.
நான் தேனீக்களுக்கு எதிரானவள் அல்ல. ஆனால் நான் அவற்றினால் கடிக்கப்படக்கூடாது என்பதற்காக அவற்றை எந்த துன்புறுத்தலுமின்றி வேறு இடத்துக்கு நகர்த்த சிலரை அழைத்தேன். இறுதியாக எனக்கு இரண்டு வழிகள் தோன்றின. ஒன்று அவற்றின் மீது பூச்சிக் கொல்லி அடித்து அவற்றை கொல்வது, இன்னொன்று அவற்றோடு வாழப் பழகிக் கொள்வது.
எனக்கு பறக்கும் பூச்சிகள் என்றாலே பயம்தான், எனினும் நான் பாதுகாப்பாக இருப்பதற்காக ஆயிரக்கணக்கான தேனீக்களை கொல்வதை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. இந்த உயிரினங்கள் மீது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன். ஏனெனில் நம் சுற்றுசூழல் அமைப்பில் அவற்றின் பங்கு இன்றியமையாதது. தேனீக்கள் அழிந்தால், அடுத்து அழியப்போவது மனிதர்கள்தான். இது தேனீக்களை பற்றிய கதைதான் என்றாலும் இது நம் நாட்டில் நடக்கும் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினையை பற்றியதும் தான்.
என் பால்கனியில் இருக்கும் தேனீக்களுக்கு நான் பொறுப்பென்றால், நம் நாடு முழுவதும் நிர்கதியாகியுள்ள லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் தானே பொறுப்பு.
ராணி தேனீ மிகவும் புத்திசாலி. தனது தொழிலாளி தேனீக்கள் இல்லாமல் தான் இல்லை என்பது அதற்கு தெரியும், தேன் கூடு சிறப்பாக இயங்கவேண்டுமென்றால் தொழிலாளி தேனீக்கள் அதற்கு வேண்டும். தேனீக்களிடமிருந்து மனிதர்களாகிய நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய உள்ளது,
இவ்வாறு ஆண்ட்ரியா கூறியுள்ளார்.