நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்து அடுத்த தேர்தலில் போட்டியிடலாமே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படம், தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி வருகிற 29-ந்தேதி இணையதளத்தில் வெளியாகிறது. அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளது.
‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், தியாகராஜன் பிரதாப்போத்தன், பாண்டியராஜன், உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டிருக்கும் நிலையில் நடிகை ஜோதிகா ஜூம் ஆப் மூலமாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது படம் குறித்த பல கேள்விகளுக்கு பதிலளித்த ஜோதிகவிடம், சமூக சேவை செய்து வரும் சிவகுமார் குடும்பத்திலிருந்து யாருமே அரசியலுக்கு வரவில்லை. நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்து அடுத்த தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிடக்கூடாது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜோதிகா, அரசியலுக்கு வராமலேயே நல்லது பண்ணலாம். உண்மையில் அப்படித் தான் அதிகமாக மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கண்டிப்பாக தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும். அனைத்துக்கும் அரசையே நம்பி இருக்கக் கூடாது. ஊர் சுத்தமாக இருக்க வேண்டுமெனில் முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்றார்.
பொன்மகள் வந்தாள்’ படத்தின் போஸ்டர்களில் ஜோதிகா – சூர்யா தயாரிப்பு என்று இருப்பது குறித்து ஜோதிகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக 2டி நிறுவனத்தின் ராஜசேகர் பேசும்போது, “சூர்யாதான் அப்படி செய்ய சொன்னார். ரொம்ப நாளாகவே யோசித்துக் கொண்டிருந்த விஷயம். இந்தப் படத்தில் போட்டால் அது சரியாக இருக்கும் என்று முடிவு செய்து போட்டுள்ளோம். இனிமேல் வரும் படங்களிலும் அது தொடரும் என்று தெரிவித்தார்.