காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியத் தூதுவரை சந்தித்து மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்த செய்தியை கேள்விப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தொண்டமானின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த தலங்கம வைத்தியசாலைக்கு விரைந்தார்.
அவரின் மறைவு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் குறிப்பாக மலையக மக்களுக்கும் பேரிழப்பென அங்கு செய்தியாளர்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
—–
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறேன் என தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களிற்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒலித்த ஒரு குரல் இன்று மௌனித்து விட்டது. அமைச்சர் தொண்டமான், அமரர் சௌமியமூர்த்தி தொண்டைமானின் வழியில் மலையக மக்களின் விடிவிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு தலைவராவார். அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதிகளில் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நன்மை கருதி அநேக வேலைத்திட்டங்களை முன்னெடுத்த ஒரு தலைவராகவும் மக்களின் நலனை பிரதிபலிக்கும் வகையில் செயற்பட்ட ஒரு மக்கள் தலைவராகவும் செயற்பட்டார்.
அன்னாரது மறைவானது மலையக மக்களிற்கு மாத்திரமல்லாது முழு இலங்கை வாழ் மக்களிற்கும் ஒரு பாரிய இழப்பாகும். அமரர் சௌமியமூர்த்தி தொண்டைமானின் மறைவிற்கு பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு தலைமைத்துவம் கொடுத்து மலையக மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த ஒரு தலைவராக ஆறுமுகம் தொண்டமான் இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டார்கள்.
இந்த துயரமான சந்தர்ப்பதில் அன்னாரின் இழப்பால் தவிக்கும் அவரது கும்பத்தினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். மலையக மக்களின் உயர்விற்கும் விடிவிற்க்கும் அன்னார் முன்னெடுத்த முயற்சிகளை அயராது தொடர்ந்தும் முன்னெடுப்பதன் மூலம் அம்மக்களின் உயர்வினை உறுதி செய்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.
அன்னாரது ஆன்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
——
இனரீதியாக கூர்மையாக்கப்பட்டுள்ள இந்நாட்டில், பெரும்பான்மை இன அரசியல் தலைவர்கள், கட்சிகள், அரசாங்கங்கள் மத்தியில் நாம் சுழியோடி எங்கள் மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றோம். எமது மக்களுடைய எதிரிகளுடன், எமக்கு உடன்பாடுள்ள அனைத்து வழிமுறைகளிலும் நாம் போராடுகிறோம், சண்டையிடுகிறோம், முரண்படுகிறோம்.
இந்த பின்னணியில் நண்பர் ஆறுமுகன் தொண்டமானும், நானும் வெவ்வேறு திசைகளில் பாயும் ஒரே இலக்கை கொண்ட நதிகள். இரட்டை குழல் ஜனநாயக துப்பாக்கிகள். மறைந்த நண்பர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கொழும்பு உட்பட மலையகமெங்கும், வெள்ளை, கறுப்பு கொடிகளை பறக்க விடும்படி, தமிழ் முற்போக்கு கூட்டணி தோழர்களையும், அனைத்து மக்களையும் கோருகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பில் தமுகூ தலைவரின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை இந்திய காங்கிரசின் மறுவடிவம். அந்த உறுதியான ஆரம்பமே இன்று ஒரு தொழிற்சங்கமாகவும், அரசியல் கட்சியாகவும் இதொகாவை நிலைநிறுத்தி இருக்கிறது. இலங்கை இந்திய காங்கிரஸ் காலத்தில் இருந்தே அதற்குள், நிகழ்ந்து வந்த கோட்பாட்டு முரண்பாடுகள் காரணமாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் பிறந்தது. அந்த சிந்தனையே இன்று ஜனநாயக மக்கள் முன்னணியாக, இன்று சகோதர கட்சிகளுடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணியாக பரிணமித்துள்ளது.
இதொகாவை விட்டு, பலர் பல காரணங்கள காரணமாக பிரிந்து சென்ற போதெல்லாம், அதை பலவீனமடைய விடாமல் கொண்டு நடத்தியவர் ஆறுமுகன் தொண்டமான். மலையக தமிழ் மக்களின் நலன்களை தனக்கே உரிய, தான் நம்பும் வழிமுறைகளில் அவர் பிரதிநிதித்துவம் செய்து வந்தார்.
அவர் இந்த வயதில் இறந்திருக்க கூடாது. இன்னமும் வாழ்ந்து இருக்க வேண்டும். நமது மக்கள் எதிர்நோக்கும் சவால் மிக்க இன்றைய காலகட்ட பின்னணியை கணிக்கும் போதே ஆறுமுகன் தொண்டமானின் திடீர் இழப்பின் ஆழம் புரிகின்றது. வேதனை விளங்குகிறது. அவருடன் அரசியல்ரீதியாக முரண்படுகின்றவர்களுக்கு கூட அவரது இன்றைய மறைவின் வெறுமை தெரிகின்றது.
கடந்த வருடம் இதே மே மாத இறுதியில் புது டில்லியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் இந்திய அரசின் அழைப்பை ஏற்று அன்றைய நமது நாட்டு ஜனாதிபதியின் தூதுக்குழுவில் நாம் இருவரும் பயணித்தோம். அதுவே நண்பர் ஆறுமுகன் தொண்டமானும், நானும் ஒன்றாய் கலந்துக்கொண்ட இறுதி வெளிநாட்டு நிகழ்வு.
இதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன், 2009ல் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற இலங்கையின் அனைத்து தமிழ் பேசும் அரசியல் கட்சி தலைவர்களின் மாநாட்டில் நானும், அவரும் கலந்துக்கொண்டோம்.
இந்நிகழ்வுகளில், நமது மக்களின் நல்வாழ்வு தொடர்புகளிலும், அரசியல் முரண்பாடுகள் மத்தியில் எங்கெங்கே இணைந்து செயற்படலாம் என்பது பற்றியும், நண்பர் ஆறுமுகமும், நானும் நடத்திய கலந்துரையாடல்கள் என் மனதில் பசுமையாக இருக்கின்றன.
2009ல் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்ற தமிழ் பேசும் கட்சிகள் மாநாட்டில், நண்பர் பெரியசாமி சந்திரசேகரனும் கலந்துக்கொண்டார். இன்று சந்திரசேகரனும் இல்லை. அவரும் தனது 53 வயதில் இறந்து போய் விட்டார். இன்று நண்பர் ஆறுமுகன் தொண்டமானும் தனது 56 வயதில் இறந்து போய் விட்டார். இந்த வெறுமை இன்று மலையக தமிழ் சமூகத்தை வாட்டுகின்றதை நான் உணருகின்றேன். இந்த சவால்களை நாம் ஒருமுகமாக எதிர்கொள்ள திடசங்கற்பம் பூணுவோம்.
—–
ஆறுமுகம் தொண்டமானின் பிரிவை தன்னால் இன்னும் ஈடுஇணைசெய்ய முடியாமல் உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
1964 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த சௌம்யமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆன ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்தார். கடந்த பல அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தவர்.
கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் ஆறுமுகம் தொண்டமான் தோட்ட உள்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக இற்றை வரை இருந்தார்.
ஆறுமுகன் தொண்டமான் 1990ம் ஆண்டு இ.தொ.காவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1993 ஆம் ஆண்டு இ.தொ.காவில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார். முதற் தடவையாக 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். அதன் பின்னர் 2000, 2004, 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.
தோட்ட உள்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் இருந்த காலப்பகுதியில் என்னுடன் சேர்ந்து யாழ் மாவட்ட மக்களுக்காக பல வீட்டுத்திட்டங்களையும் மலையக வாழ் யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளுக்கான பல உதவி திட்டங்களையும் செய்தார். கடந்த பெப்ரவரி 21ம் யாழ் வருகை தந்தபோதும் தெல்லிப்பளை பிரதேச செயலக பகுதியில் வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். யாழ் மக்களுக்காக வீட்டுதிட்டங்களை தொடர்ந்து தருவதாக உறுதியளித்தார். அவரது பிரிவு என்னால் இன்னும் ஈடுஇணைசெய்யமுடியாமல் உள்ளது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.