மலையக மக்களின் விடிவுக்காக போராடி வந்தவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.
1964ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகன் தொண்டமான், கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.
இவர் 1990ஆம் ஆண்டு முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசித்துள்ளார்.
1993 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் உத்தியோகபூர்வ நிதிச் செயலாளராகவும் ஒரு வருடத்துக்கு பின்னர் 1994 இல் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். இதே 1994 ஆம் ஆண்டில் முதன் முறையாக இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா தொகுதியில் போட்டியிட்டு 75,000 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். இது அவரின் அரசியலில் முதலாவது பிரவேசம் எனலாம்.
1999 இல் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் காலஞ்சென்ற பின் அவர் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குராமதுங்கவுடன் இணைந்து சிறப்பாக செயற்பட்டு அமரர் தொண்டமானின் வெற்றிடத்தை திருப்திகரமாக நிறைவு செய்தார்.
2000 ஆம் ஆண்டில் தொழிற்சங்கத்தின் தலைமையை ஏற்ற அவர் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையினூடாக 20% சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தார்.
2000 ஆம் ஆண்டில் பொதுஜன ஐக்கிய முன்னணியோடு முதல் முறையாக போட்டியிட்டாலும் கூட பாராளுமன்ற தேர்தலில் 4 ஆசனங்களைப் பெற்று அவ்வரசிலும் அரசை நிர்ணயிக்கும் சக்தியாக இ.தொ.கா. விளங்கியது. இப்பாராளுமன்றத்தில் 17வது யாப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட போது முதல் முறையாக இந்திய வம்சாவளி மக்கள் ஒரு தனித் தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய வம்சாவளி பிரதிநிதி ஒருவர் அரசியலமைப்புச் சபையில் அங்கம் வகிக்கும் அந்தஸ்தை நிலைநாட்டினர்.
2001 ஆம் ஆண்டு ஐ.தே.க.வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு அந்த அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சைப் பெற்று அரசிலே ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சராக விளங்கினார்.
2002 ஆம் ஆண்டில் மீண்டும் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி 121/= ரூபாவாக இருந்த நாட் சம்பளத்தை 147/= ரூபாவாக உயர்த்தினார்.
இதைத் தொடர்ந்து அரசாங்கம் தனியார் துறைக்கு அறிவித்த சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து ஹற்றன் மல்லியப்பு சந்தியில் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார். இப்போராட்டத்தை ஏளனமாக நோக்கிய எதிரணியினர் கூட இறுதியில் போராட்டத்தில் தாமும் பங்குகொள்ள முன்வந்தனர். இப்போராட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
2003 ஆம் ஆண்டில் மலையக மக்களின் முக்கிய பிரச்சினையாக விளங்கிய பிரஜாவுரிமை விடயத்தில் இந்திய கடவுச் சீட்டு பெற்றவர்களையும் இலங்கை பிரஜைகளாக அங்கீகரிக்கும் விசேட சட்ட மூலத்தை அரசாங்கம் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தார்.
2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்டு முதன் முறையாக 8 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்குக் காரணமாக இருந்தார். அத்தேர்தலைத் தொடர்ந்து பொ.ஐ.மு. அரசை அமைத்த போது அவ்வரசிலே தான் இணையாவிட்டாலும் அப்போதைய நிதிச் செயலாளர் முத்துசிவலிங்கத்தை அமைச்சராக்கினார்.
லயச்சிறைகளில் இருந்த தோட்ட மக்களை கெளரவமான வாழ்க்கைக்கு தயார் செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மாடி வீட்டுத் திட்டங்கள், உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் என மலையகத்தில் கடந்த 20 ஆண்டுகளில் செயற்படுத்தப்பட்ட அனைத்தும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உள்ளத்தில் உதித்தவைகள்தான்.
2006 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சை பொறுப்பேற்று – எதிர்காலத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டங்களை பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் ஊடாக செயற்படுத்தி னார். 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து நுவரெலியா மாவட்டத்தில் 65,000 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை அவருக்கு முக்கிய அமைச்சுகளில் ஒன்றான கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சு பதவியை 2010 ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி பொறுப்பேற்றார். இதைத் தவிர நுவரெலியா மாவட்டத்திற்கான அபிவிருத்தித் திட்டங்களை கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இ.தொ.கா.வின் தலைமை பொறுப்பை பிரதியமைச்சர் முத்துசிவலிங்கத்திற்கு வழங்கியிருந்தாலும் பொதுச் செயலாளராக பதவி வகித்து இ.தொ.கா.வின் ஆணிவேராக இருந்தார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இ.தொ.கா. எடுத்த முயற்சிகளின் பலனாகவே மலையக இளைஞர், யுவதிகள் அரச துறை தொழில் வாய்ப்புகளில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு ஆசிரியர் நியமனங்கள், தபால் சேவை ஊழியர்கள், தொடர்பாடல் உத்தியோகத்தர்கள், மற்றும் மலையகத்தின் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச திணைக்களங்களில் அரசாங்கம் தொழில் வாய்ப்பினை வாரி வழங்கியமைக்கு இ.தொ.கா.வே பின்னணியில் நின்றது.
இதன் மூலம் ஒரு வட்டத்திற்குள் வாழ்ந்த மலையக இளைஞர், யுவதிகள் தேசிய நீரோட்டத்திற்குள் இணைக்கப்பட்டது மாத்திரமின்றி மலையகத்தில் இந்த நியமனங்கள் கல்வித்துறையிலும் வரலாற்று திருப்பங்களை ஏற்படுத்தியிருக் கின்றது. மலையகத்தில் வளமான எதிர்காலம் நோக்கிய பயணத்திற்கு இ.தொ.கா.வின் அச்சாணியாக விளங்கியவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.