விவேக் அற்புதமான மனிதர் என்றும், தான் வடிவேலுவின் ரசிகன் என்று மாதவன் தெரிவித்துள்ளார்.
‘அலைபாயுதே’ படம் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என வளர்ந்தவர் நடிகர் மாதவன். தற்போது ‘ராக்கெட்ரி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார்.
‘மின்னலே’, ‘டும் டும் டும்’ உள்ளிட்ட சில படங்களில் விவேக்குடனும், ‘ரெண்டு’ படத்தில் வடிவேலு உடனும் இணைந்து நடித்துள்ளார் மாதவன். இருவரும் இணைந்து நடித்தது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் நடந்த நேரலை கலந்துரையாடலில் பகிர்ந்து கொண்டுள்ளார் மாதவன். அதில் அவர் கூறியிருப்பதாவது;
“விவேக் – வடிவேலு இருவருடனும் நடித்துள்ளேன். வடிவேலு சாருடன் நடிக்கும் போது எனக்கு அவ்வளவாக தமிழ் வராது. நல்ல நடிக்குறப்பா என்று பாராட்டுவிட்டு, அவருடைய ஜோக்குகள் பற்றியெல்லாம் பேசிட்டு இருப்பார். நான் பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பேன். ‘தேவர் மகன்’ காலத்திலிருந்து அவரைப் பார்க்கிறேன். வடிவேலு சாரின் மிகப்பெரிய ரசிகன் நான்.
விவேக் சார் வந்து கொஞ்சம் ஆங்கிலம் கலந்து பேசுவார். ஆகையால் நான் பேசுவது எல்லாம் அவருக்குப் புரியும். கே.பாலசந்தர் சார் பட்டறையிலிருந்து வந்தவர். ரொம்ப அற்புதமான மனிதர். நான் திரைத்துறைக்கு வந்தவுடன் நாகேஷ் சார், கமல் சார் ஆகியோருடன் எல்லாம் நடித்துவிட்டேன். அதற்கு நான் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
இப்போது கூட கமல் சாரை சந்திக்கும் போது கிள்ளிப் பார்த்துக் கொள்வேன். அனைவருமே ரொம்ப அற்புதமானவர்கள். நாகேஷ் சார் எல்லாம் உட்கார வைத்து அவர்களுடைய அனுபவங்களை எல்லாம் ஷேர் பண்ணிக் கொள்வார். நிறைய அட்வைஸ் கொடுப்பார். விவேக் – வடிவேலு ஆகியோருடன் நடித்தது எல்லாம் மறக்கவே முடியாது. விவேக் சாருடன் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தேன். மணி சாரும் நானும் பண்ணிய படத்தில் ’கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் மட்டும் விவேக் சார் இருக்க மாட்டார்”
இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.