இன்னும் நமக்கு நம்பிக்கை உண்டு.சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
நீ பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன். ஏசாயா 41:10
அண்மைக்காலமாக உலகில் ஏற்பட்ட கொரோனா அழிவுகள் பற்றி அறிந்திருப் பீர்கள். வாழ்க்கை நிலையற்றதாகி விட்டது என்பதற்கு இவைகள் ஓர் சிறந்த உதாரணமாகும். வீட்டில் இருந்து புறப்பட்டால் திரும்பவீடு சேருவது நிச்சயமற்ற தாகி விட்டது. இன்று எல்லோருடைய வாயிலும் இதுதான் பேச்சு. உண்மையும் இதுதான். ஆனால் நமக்கு (தேவனை அறிந்த மக்களுக்கு) இது புதிதான விடையமல்ல.
எத்தனையோ வருடங்களுக்கு முன்னரே, மனுசனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாக இருக்கிறது. வெளியிலே புஸ்பத்தைப்போல பூக்கிறான். காற்று அதன்மேல் வீசிய வுடனே அது இல்லாமற் போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது என்று சங்கீதத்தில் (103:15-16) இல் எழுதப்பட்டுள்ளது.
இவ்வுலக வாழ்வு நிலையானது அல்ல என நமது ஆண்டவர் எழுதிக் கொடுத்து விட்டார். நாம் அதைக் குறித்து சிறிதேனும் சிந்திக்கிறோமா? இவ்வுலகமே நிரந்தரம் என்பதுபோல் எண்ணி சுய இச்சைகளை, சுய விருப்பங்களை நிறைவாக்கும் எண்ணத்தோடு நமது வாழ்வை எப்படியெல்லாமோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுதாவது நாம் உணர்வடைய வேண்டும் என்று தேவனாகிய கர்த்தர் விரும்புகிறார்.
ஒவ்வொரு நாளும் ஏதோவொரு துன்பமான செய்தி மனுக்குலத்தை நோக்கி வந்து கொண்டேயிருக்கின்றன. மனித உயிர் அற்பமும் தூசியுமாய் போய்விட்டது. கொடுரமும் கொலை வெறியும் ஒருபுறம். எதிர்பாராத இயற்கையின் அனர்த்தங்கள் இன்னொருபுறம். சிந்தித்துப் பார்க்காத கொடியவியாதிகள் அடுத்த பக்கம். மனிதகுலம் எந்தப்பக்கம் திரும்புவது? என்ற அங்கலாய்ப்பில் உள்ளது. அன்று சிவந்த சமுத்திர த்தின் கரையிலே திகைத்து நின்ற நிலைதான் நம் அநேகருக்கு இன்று. (யாத். 14:1-31)
இந்த தியானத்தினை வாசிக்கும் நம் எத்தனை பேருடைய வீடுகளில் கண்ணீரும் வேதனையும் மரணமும் உண்டோ அதை தேவன் அறிவார். என்றாலும், இன்னும் தேவனைத் தெய்வமாக கொண்டிருக்கும் நமக்கு நம்பிக்கை உண்டு. (இதுவரை தேவனை அறியாமலும், அவரைத் தெய்வமாகக் கொண்டிராமலும் இருப்பாயானால் இன்றே உன் இருதயத்தை தேவன் வாசம்பண்ண இடம்கொடு). ஏனெனில் நான் உன்னுடனே இருக்கிறேன் என்றவர் நம்மோடே இன்னமும் இருக்கிறார்.
நான், உன் தேவன் என்றவர் இன்னமும் தமது வாக்கில் மாறாதவராக இருக்கிறார். நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன் என்றவர் இன்றும், எல்லா இன்னல்கள் துன்ப சூழ்நிலைகள் மத்தியிலும் நம்மைப் பலப்படுத்தி நடத்து கிறவராகவே இருக்கிறார்.
இக்கட்டுக்களும் நெருக்கக்களும்தான் நம்மை, நமக்கு உணர்த்தும் மிக அருமையான தருணங்கள். அதை மறந்து நெருக்கங்கள் வரும்போது மட்டும் முறையிட்டுக் கொண்டிருக்கலாமா? நம்தேவன், உபத்திரவத்தின் குகையிலே உன்னை தெரிந்து கொண்டேன் என்றார். வாழ்வின் போராட்டம் என்ற உலையிலேதான் கர்த்தர் நம்மை சோதித்து அறிகிறார். சோதிக்கப்படாத விசுவாசமும் அன்பும் உறுதியானது என்று சொல்லமுடியாது.
சி என் என் தொலைக் காட்சியில் பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு அமெரிக்க இராணுவவீரன் ஈராக்கில் நடந்த எதிர்பாராத பயங்கர விபத்தில் சிக்கி மயிரிளையில் உயிர் தப்பினான். ஆனால் அவனின் கால்கள் இரண்டும் மிகுந்த பாதிப்புக்குட்பட்டதால், நான் செத்திருக்க வேண்டியவன், என்தேவனே என்னைக் காப்பாற்றினார் என்றான். இதன் கருத்து, அவன் இக்கட்டில் தேவனைச் சார்ந்து கொண்டான் என்பதற்கு சாட்சியாக இருந்தது.
அலைகள் வாசகநேயர்களே, நெருக்கடிகள்தான் நாம் தேவனுக்குகாகத் தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரங்கள் என்பதை நமக்க உணர்த்துகின்றன. ஒரு சில வேளைகளில் சில சூழ்நிலைகள் சம்பவங்கள் நம்மால் விளங்கிக் கொள்ளக் கடினமானதாக இருக்கலாம். அல்லது நமக்கு வெறுப்பூட்டுபவையாக இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட வேளைகள்தான் நாம் தேவனைச் சார்ந்து கொண்டு அவருடைய வார்த்தைகளை நம்பவேண்டிய தருணங்கள்.
ஆகவே மனம் தளர வேண்டாம். எவ்வித பயங்கரமான சூழ்நிலைகள் ஆனாலும், வாழவே முடியாநிலைபோல் சூழ்நிலைகள் இருந்தாலும், நோயின் கொடுமை ஆனாலும், வாழ்வின் வெறுப்பினால் தனிமைச் சிறையில் வாழ்ந்தாலும் கர்த்தாவே எல்லாச் சூழ்நிலைகளிலும் நீர் என்னைக் காத்து வழிநடத்தும் என்று ஒப்புக்கொடுத்து வாழப்பழகிக் கொள்வோமானால் அதுவே வாழ்வில் பெரிய வெற்றியாகும். இந்த வெற்றியை வாழ்வில் கண்டடைந்து கொள்ள இந்த ஜெபத்தை முழுஇருதயத்தோடு அறிக்கை செய்.
அன்பும் இருக்கமும் உள்ள நல்ல தகப்பனே, என் இக்கட்டில் பெலனாக இருக்கிறவர் நீரே, நீர் என்னுடன் இருப்பதை உணர எனக்கு கிருபை செய்யுங்க அப்பா. இதுவரை உணராமல் வாழ்ந்த காலத்தை எனக்கு மன்னித்து, இன்றிலிருந்து உம்மில் நம்பிக்கை வைத்து, முழு இருதயத்தோடு உம்மை அண்டிவாழ எனக்கு கிருபை செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே, ஆமேன்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – praying for Denmark.