இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவர் ஒருவரை போலீசார் கொன்றதால் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மினசோட்டா தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கள்ளநோட்டு தொடர்பான விசாரணை ஒன்றின்போது, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிலாய்ட் எனும் நபர் போலீசாரின் பிடியில் உயிரிழந்தார்.
இந்த இறப்பிற்கு நீதிவேண்டி அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். கடந்த நான்கு நாட்களாக, நாடு முழுவதும் பரவியுள்ள இந்த போராட்டத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பல இடங்களில் கலவரம் வெடித்ததை தொடர்ந்து 16 மாகாணங்களிலுள்ள 25 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.
மேலும், வெள்ளை மாளிகையின் அருகிலும் போராட்டங்கள் அதிகரித்துள்ளதால், வழக்கத்துக்கு மாறாக முதன்முறையாக வெள்ளைமாளிகையின் விளக்குகள் அனைத்தும் முற்றிலும் அணைக்கப்பட்டு, அப்பகுதியே இருளில் மூழ்கியது.
இந்தநிலையில், சமூக வலைத்தளங்களான கூகுள் மற்றும் யூடியுப் ஆகியவை, இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை, ஓடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும். துக்கம், கோபம், சோகம் மற்றும் பயத்தை உணருபவர்களே, நீங்கள் தனியாக இல்லை.
இன சமத்துவத்திற்கான எங்கள் ஆதரவையும், கருப்பின சமூகத்துடன் ஒற்றுமையையும், ஜார்ஜ் ஃபிலாய்ட், பிரோனா டெய்லர், அஹ்மத் ஆர்பெரி மற்றும் குரல் இல்லாத மற்றவர்களின் நினைவாகவும் இதை பகிர்ந்து கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.