இளையராஜா புதிதாக ‘இசை ஓடிடி’ என்ற பிரத்தியேக இணையம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவுக்கு இன்று (மே 2) பிறந்த நாள். இதனால் சமூக வலைதளத்தில் தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே தனது பிறந்த நாளை முன்னிட்டு புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இளையராஜா. அதில் அவர் கூறியிருப்பதாவது:
“எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல துடிதுடித்துக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களே.. உங்களையும் என்னையும் சந்திக்க விடாமல் இந்த கரோனா காலம் தடுக்கிறது. இருந்தாலும் உங்கள் அன்பு உள்ளங்களை நான் நன்றாக அறிவேன். உங்களுடனேயே இசை வடிவில் நான் தினமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். எனக்கும் நன்றாக தெரியும். எந்த ஒரு நிகழ்வானாலும் சரி என்னுடைய இசை உங்களுடனே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
வெறும் இசை மட்டும் வந்தால் போதுமா, நான் வர வேண்டாமா உங்கள் இல்லத்திற்கு. உங்கள் இல்லம் தேடி நானே நேரடியாக வருகிறேன். இசை ஓடிடி மூலமாக வருகிறேன். இந்த பிறந்த நாளில் இசை ஓடிடி தொடர்பாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இசை ஓடிடியில் எப்படி ஒவ்வொரு பாடலும் உருவானது என்ற விஷயங்களும், என்னென்ன நிகழ்வுகள் நடந்தது என்பதும், அதை பதிவு செய்வதற்கு எவ்வளவு சிரமப்பட்டோம் என்பதும், எவ்வளவு பேர் எப்படி உழைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியும், மூலகாரணமாக இருந்தவர்கள் யார் என்பதைப் பற்றியும் சொல்லவுள்ளேன்.
இதை நீங்கள் வேறு எந்தச் சேனலும் கேட்க முடியாத தகவல்களை இது தாங்கி வரும். மேலும், உலகின் மாபெரும் இசைக்கலைஞர்கள் தங்களுடைய அனுபவங்களின் மூலமாக அவர்கள் உணர்ந்ததையும், என்னைப் பற்றிய அபிப்ராயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் இதில் பங்குபெற்று அவர்களுடைய அனுபவங்கள் மூலமாக சுவாரசியமான தகவல்களை அளிக்கக் காத்திருக்கிறார்கள். இதெல்லாம் உங்கள் வீடு தேடி ‘இசை ஓடிடி’ மூலமாக வருகிறது. அந்த நாளுக்காகக் காத்திருங்கள். என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள, உங்கள் வீடு தேடி வந்து கொண்டிருக்கிறேன்”
இவ்வாறு இளையராஜா தெரிவித்துள்ளார்.