கொரோனாவிற்கு தடுப்பூசி மற்றும் மருந்து ஆய்வில் சீனா மும்முரம் காட்டி வருவதாக சீன அரசுத் தலைவர் லீக்கெச்சியாங் தெரிவித்துள்ளார்.
சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 6 மாத காலத்தில் அது உலகம் முழுவதும் பரவி விட்டது. கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ், உலக நாடுகளையெல்லாம் தொடர்ந்து தன் பரவலால் அலற வைத்து வருகிறது.
இந்த கொரோனாவை கொல்வதற்கு இன்னும் ஒரு மருந்து, சந்தைக்கு வருவதில்லை. இந்தியாவில் தொடங்கி இஸ்ரேல் வரை எத்தனையோ நாடுகள் மருந்துகளையும், தடுப்பூசிகளையும் கண்டறிந்து அவற்றை சோதனை செய்யும் முயற்சியில் முழு வீச்சில் இறங்கி இருக்கின்றன. சோதனை செய்து வெற்றி கண்டு தயாரிக்கத்தொடங்கினாலும் எல்லா மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டுமானால் ஒன்றிரண்டு ஆண்டுகள் வரையில் ஆகும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், தடுப்பூசி ஆய்வில் சர்வதேச ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளித்து வரும் சீனா, கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசி, மருந்து மற்றும் நோய் கண்டறிதல் ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகச் சீன அரசுத் தலைவர் லீக்கெச்சியாங் தெரிவித்துள்ளார்.
உலகத்தடுப்பூசி உச்சிமாநாட்டில் 4ஆம் நாள் காணொலி வழி உரை நிகழ்த்திய அவர்,
சீனா மக்களின் வாழ்க்கையை முதலிடத்தில் வைத்திருக்கிறது, கடினமான முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தொற்றுநோயை திறம்பட கையாண்டது.
இருப்பினும், தொற்றுநோய் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. எந்த நாடும் வைரஸிலிருந்து விடுபடவில்லை என்றும், பல்வேறு மக்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் உலகச் சுகாதார அமைப்பு தடுப்பூசி ஆய்வுப் பணிக்குத் தலைமை தாங்குவதற்குச் சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றது என்றும், தடுப்பூசிக்கான மருத்துவ ஆய்வு மற்றும் சந்தையில் அதன் பயன்பாட்டைச் சீனா ஊக்குவித்து வருவதாகவும், உலகத்துக்குப் பாதுகாப்பு, மற்றும் தரத்துடன் கூடிய பயனுள்ள பொது உற்பத்திப் பொருட்களை வழங்குவதாகவும் தெரிவித்தார். தொற்றுநோயை சமாளிக்க நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.