வட மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் வடமாகாண சிரேஷ்ட அதிகாரிகளுடனான சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் போதே வடமாகாண ஆளுநர் மேற்கண்ட வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வட மாகாண பொலிஸார் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த அளப்பரிய சேவைகளை பாராட்டுக்கின்றேன். தற்போது வடமாகாணத்தில் சட்டவிரோதமான முறையில் சமுதாயத்தைப் பாதிக்கின்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை, திருட்டு மற்றும் வாள்வெட்டு, போதைப்பொருள் பாவனை, வீதி விபத்துக்கள் ஆகியன தொடர்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகின்றது.
மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தை பாதிக்கின்ற வகையில் களவு, வாள் வெட்டு,போதைப்பொருள் விற்பனை போன்ற விடயங்களின் பின்னணிகள் உள்ளிட்ட அனைத்துக் காரணங்களையும் கண்டறிந்து அவற்றை தடைசெய்வதோடு நிலைமையை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். முக்கியமாக பாடசாலைகளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.
சமுதாய நலனில் அக்கறை கொள்ளவேண்டிய மாணவர்களையும் இளைஞர், யுவதிகளையும் உருவாக்க திணைக்களங்கள் தங்களுக்கான அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தவேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது என்றும் ஆளுநர் இந்த கூட்டத்தில் வலியுறுத்தினார்.
கே.அசோக்குமார்