வீட்டில் இருந்தே சாப்பாடு கொண்டு வர வேண்டும்’ என்று சில கட்டுப்பாடுகளுடன் 10-ந் தேதி, ‘சின்னத்திரை’ படப்பிடிப்பு நடைபெறும் என்று குஷ்பு தெரிவித்தார்.
சில விதிமுறை கட்டுப்பாடுகளுடன், 10-ந் தேதி முதல் ‘சின்னத்திரை‘ படப்பிடிப்புகள் நடைபெறும் என்றும், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே சாப்பாடு கொண்டு வர வேண்டும் என்றும் முடிவு செய்திருப்பதாக நடிகை குஷ்பு கூறினார்.
‘சின்னத்திரை‘ தொடர்களின் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. அதிகபட்சமாக 60 பேர்கள் வரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என்றும் அரசு அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து, ‘சின்னத்திரை‘ படப்பிடிப்புகளை தொடங்குவது பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில் தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சுஜாதா, செயலாளர் குஷ்பு, முன்னாள் தலைவர் ராதிகா சரத்குமார் உள்பட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றி சங்க செயலாளர் குஷ்பு கூறியதாவது:-
“சின்னத்திரை படப்பிடிப்புகளை வருகிற 10-ந் தேதி முதல் தொடங்க முடிவு செய்து இருக்கிறோம். படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு போன்ற இறுதிக்கட்ட பணிகளை கவனிக்கும் தொழில்நுட்ப கலைஞர்களையும் சேர்த்து படப்பிடிப்பில் 60 பேர்கள் கலந்து கொள்ளலாம் என்று அரசு அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.
தொழில்நுட்ப கலைஞர்களை சேர்க்காமல், 40 பேர்களுடன் படப்பிடிப்பை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவ்வப்போது கிருமிநாசினி தெளிப்பது, ஒரே இடத்தில் படப்பிடிப்பை நடத்தாமல் அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களை மாற்றுவது போன்ற விதிமுறை மற்றும் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும்.
முன்பு படக்குழுவினர் அனைவருக்கும் சாப்பாடு வழங்கப்பட்டு வந்தது. அதில் சில அசவுகரியங்கள் இருப்பதால், நடிகர்-நடிகைகள் உள்பட படக்குழுவினர் அனைவரும் அவரவர் வீடுகளில் இருந்தே சாப்பாடு கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறோம்” என்று குஷ்பு கூறினார்.