பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி

இம்முறை பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு வில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

—–

ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்டத்தின் சார்ப்பில் வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக விருப்பு இலக்கம் 8 வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இன்று முதல் தன்னுடைய பாராளுமன்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

—–

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் கடந்த மே 13ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (10) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.

கடந்த வருடம் நவம்பர் 10 ஆம் திகதி இடம்பெற்ற வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு வழக்கு தொடர்பில், முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் திகதி பிடியாணை வழங்கப்பட்டதை அடுத்து அவர், டிசம்பர் 26ஆம் திகதி லங்கா ஹொஸ்பிடல் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிசம்பர் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டதோடு, டிசம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டார்.

வைத்தியசாலையில் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, டிசம்பர் 30ஆம் திகதி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை வழங்க உத்தரவிட்டது.

ஆயினும், குறித்த நீதவான் நீதிமன்றத்தின் பிணை உத்தரவை எதிர்த்து, சட்டமா அதிபரினால் கடந்த ஜனவரி 08ஆம் திகதி மீளாய்வு மனு விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனுவிற்கு அமைய, கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த மே13ஆம் திகதி அவரது பிணையை இரத்து செய்வதாக அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு (CID) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டிருந்தார்.

அதே தினத்தில் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜரான ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மே 27ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பில் கடந்த காலத்தில் ஏற்பட்ட நிலைமைகளை கருத்திற் கொண்டு, குறித்த பிணை மனு பரீசீலனையை மற்றுமொரு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு, சட்ட மாஅதிபர் திணைக்களம் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து கடந்த மே 27ஆம் திகதி குறித்த வழக்கை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றிற்கு மாற்றுவதாக லங்கா ஜயரத்ன அறிவித்தார்.

அன்றையதினம் (27) கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜித சேனாரத்னவுக்கு இன்று (10) வரை மீண்டும் விளக்கமறியலை நீடித்த நீதவான், இன்றையதினம் அவரது பிணை தொடர்பான முடிவை அறிவிப்பதாக அறிவித்திருந்தார்.

அதற்கமைய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு இன்றையதினம் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts