இன்று இலங்கை மின் ஊடகங்களின் முக்கிய செய்திகள் சில..

பாதாள உலகத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி டிரன்த வலலியத்த தெரிவித்துள்ளார்.

நேற்று (10) இரவு தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பான ´அலுத் பார்ளிமென்துவ´ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மற்றும் நீதிமன்றம் அவர்களது கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றிய போதிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமை பாரிய சிக்கல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
——

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 99 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்புகளை நடத்திய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும், வேறு கட்சி சார்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தோருக்கு எதிராகவே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

மிக குறுகிய காலத்திற்குள் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களை கூடிய விரைவில் கட்சியில் இணைத்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேர்தலை முன்னிட்டு மக்களை தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் பிரச்சார கூட்டங்களை நடத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

—–

அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலும், லிப்டன் சுற்று வட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த பொலிஸ் திணைக்களத்தில் ஆற்றப்பட்ட சேசைகள் இவ்வாறு ஒரு சில பொலிஸாரின் செயற்பாடுகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

ஆகவே குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை அதிகாரத்தை துஸ்பிரயோகப்படுத்தியமை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

´பயங்கரமான கனவில் இருந்தது போல்´ இந்த சம்பவத்தை உணர்வதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனநாயக நாடொன்றில் எவருக்கும் கருதுத்து தெரிவிப்பதற்கான முழு சுதந்திரம் உள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு தெரிவித்துள்ளார்.

அதுவே ஜனநாயகத்தின் முக்கிய பண்பு எனவும் அவ்வாறு ஜனநாயக விழுமியங்கள் கடைப்பிடிக்கப்படாத ஒரு நாடு ஜனநாயக நாடாக இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சமூகத்திலிருந்து கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத போதிலும் மக்கள் ஒன்று கூடுவதற்கான அதிகாரம் இன்னும் வழங்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த சம்பவம் தொடர்பான அறிக்கையை விரைவில் சட்டமா அதிபரிடம் கையளிக்கவுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

—–

பாகிஸ்தான் வழியாகப் பெருங்கூட்டமாக வரும் பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதியில் பயிர்களை நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. அவை வேறு நாடுகளுக்கும் படையெடுக்கும் அபாயம் உள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களில் வெட்டுக்கிளிகளின் மிகப்பெரிய தாக்குதல் இது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வெட்டுக்கிளிகள் அடையாளம் காணப்பட்டு ட்ரோன்கள், ட்ராக்டர்கள் மற்றும் கார்கள் உதவியுடன் பூச்சிகொல்லி மருந்து தெளித்து அவற்றை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராஜஸ்தானுக்குள் நுழைந்து இந்தியாவில் அழிவை ஏற்படுத்துவதற்கு முன்னதாக, இந்த வெட்டுக்கிளிகளின் பிரமாண்டமான கூட்டம் பாகிஸ்தானில் மாபெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, நான்கு கோடி வெட்டுக்கிளிகளைக் கொண்ட கூட்டமானது 35 ஆயிரம் மக்களுக்கு போதுமான உணவை அழித்து விடும்.

வெட்டுக்கிளிகளை விரட்ட மக்கள் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். சிலர் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தார்கள். வேறு சிலர், பாத்திரங்களை தட்டி ஓசை எழுப்பி வெட்டுக்கிளிகளை விரட்ட முயல்கிறார்கள். 1993ஆம் ஆண்டுக்கு பிறகு, இவ்வளவு பெரிய அளவில் வெட்டுக்கிளி தாக்குதலை இந்தியா எதிர்கொண்டதில்லை.

Related posts