சுஷாந்தின் மரணம் நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கை மணி என்று விவேக் ஓபராய் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. ‘கை போ சே’, ‘ஷுத்தேஸி ரொமான்ஸ்’, ‘டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் தோனியாக நடித்தது இவர்தான். இந்தப் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானார். சுஷாந்தின் திடீர் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள்.
நேற்று (ஜூன் 15) மாலை சுஷாந்த்தின் இறுதிச்சடங்கில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் விவேக் ஓபராயும் ஒருவர். இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபின், தனது ட்விட்டர் தளத்தில் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார் விவேக் ஓபராய்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“சுஷாந்தின் இறுதிச் சடங்கில் இன்று கலந்துகொண்டது மிகவும் வருத்தமான விஷயமாக இருந்தது. எனது தனிப்பட்ட அனுபவத்தை அவரிடம் பகிர்ந்து அவரது வலியைக் குறைத்திருக்கலாம் என்று உண்மையாக விரும்புகிறேன்.
நானும் வலி மிகுந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். அது மிகவும் இருண்ட, தனியான பயணமாக இருக்கலாம். ஆனால் என்றும் மரணம் அதற்கு விடை அல்ல. தற்கொலை அதற்கான தீர்வாக எப்போதும் இருக்க முடியாது.
இன்று அவரது இழப்பின் துயரத்தை உணர்வும் அவரது குடும்பம், நண்பர்கள், லட்சக்கணக்கான ரசிகர்கள் பற்றி அவர் ஒரு விநாடி நினைத்துப் பார்த்திருக்கலாம். எவ்வளவு பேர் அவர் மீது அக்கறை கொண்டுள்ளனர் என்பது அவருக்குப் புரிந்திருக்கும்.
இன்று சுஷாந்தின் தந்தையை நான் பார்த்தபோது, அவர் தகனம் செய்ய தீ வைத்தபோது அவரது கண்களில் இருந்த வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் திரும்பி வர வேண்டும் என்று அவரது சகோதரி அழும்போது, கெஞ்சும்போது, அது எவ்வளவு ஆழமான துயரத்தை உணரவைத்தது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை.
ஒரு குடும்பம் என்று சொல்லிக்கொள்ளும் நமது துறை, தீவிரமாக ஒரு சுய பரிசோதனை செய்யும் என்று நம்புகிறேன். நாம் நல்லது நடக்க மாற வேண்டும். மற்றவர்களைப் பற்றிப் பேசுவதைக் குறைத்து, அக்கறை செலுத்துவதை அதிகரிக்க வேண்டும். அதிகார விளையாட்டைக் குறைத்து, கருணை, தாராள மனப்பான்மையை அதிகரிக்க வேண்டும். ஈகோவுக்கு இடம் கொடுப்பதைக் குறைத்து தகுதியான திறமைகளை அங்கீகரிக்க வேண்டும். இந்தக் குடும்பம், நிஜமாகவே ஒரு குடும்பமாக மாற வேண்டும்.
திறமை நசுக்கப்படும் இடமாக இல்லாமல் வளர்க்கப்படும் இடமாக மாற வேண்டும். இங்கு ஒரு கலைஞர் மதிக்கப்படுவதாக உணர வேண்டும், தான் மோசம் போவதாக அல்ல.
இது நம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணி. என்றும் புன்னகையுடன் இருக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத் இல்லாத குறையை நான் உணர்வேன். சகோதரா, நீ உணர்ந்த அனைத்து வலியையும் போக்கி, உன் இழப்பைக் கையாளும் வலிமையை கடவுள் தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.
நீ இப்போது நல்ல இடத்தில் இருக்கிறாய் என்று நம்புகிறேன். ஒரு வேளை, (நீ இருக்கும்போது) உனது இருப்பைக் கொண்டாட எங்களுக்குத் தகுதி இல்லை என நினைக்கிறேன்”.
இவ்வாறு விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.
——
பாலிவுட்டில் ஒருவரது மதிப்பு அவரது வெற்றியைப் பொறுத்துத்தான் இருக்கும் என்றும், இங்கு இருக்கும் பொறிகளில் சிக்கிவிடாதீர்கள் என்றும் இயக்குநர் ஹன்ஸ்ல மேத்தா கூறியுள்ளார்.
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், ஞாயிற்றுக்கிழமை மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு பாலிவுட்டில் இருக்கும் வாரிசு கலாச்சாரமும் அவருக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கப்படாமல், வெளி ஆளைப் போல அவரை நடத்தியதுமே காரணம் என்று பாலிவுட்டிலிருந்தே நடிகை கங்கணா ரணவத் உள்ளிட்ட பலரின் குரல்கள் எழுந்துள்ளன.
தற்போது, ‘ஆக்சிடண்டல் ப்ரைம் மினிஸ்டர்’, ‘அலிகார்’, ‘சிட்டி லைட்ஸ்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஹன்ஸல் மேத்தாவும் கிட்டத்தட்ட இதே மாதிரியான கருத்தைக் கூறியுள்ளார்.
“இந்தத் துறையில் வெளியில் இருந்து வந்த பல இளைஞர்கள் உள்ளனர். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கான தேவை இருக்கும் வரை, நீங்கள் தான் அடுத்த பெரிய நட்சத்திரம் என்று உங்களை உணர வைக்கும் ஒரு அமைப்பு இங்கு உள்ளது. நீங்கள் தோல்வியடைந்த அடுத்த நொடி உங்களை கீழே இறக்கி கேலி செய்ய ஆரம்பிப்பார்கள். அந்த பொறியில் சிக்கிவிடாதீர்கள்.
உங்களைக் கொண்டாடும் ஒருவரே சில காலம் கழித்து உங்கள் வீழ்ச்சியையும் கொண்டாடுவார். இங்கு வெற்றி, தோல்வி இரண்டுமே நிலையற்றவை. ஆனால் நீங்கள் அப்படியல்ல. நேர்மையாக இருங்கள், உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். மற்றவர்கள் உங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்கள் தொடர்பு உங்கள் கலை, உங்கள் திறமை, உங்கள் ரசிகர்களுடன் தான் இருக்க வேண்டும். வேறெதுவும் முக்கியமல்ல.
ஒரு கட்டத்தில் நீங்கள் வெற்றிபெறுவீர்கள், தடுமாறுவீர்கள். ஆனால் உங்களை விட வேறெதுவும் முக்கியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் புரிந்து வைத்திருப்பதை விட உலகம் பெரியது, கனிவானது. வாய்ப்புகளும் தான். நீங்கள் தாக்குப்பிடித்தால் அவை உங்களுக்குக் கிடைக்கும். என்றும் மனம் தளராதீர்கள்” என்று ஹன்ஸல் மேத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.