மைத்திரி மற்றும் ரணிலிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலமொன்றை பதவி செய்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளர் நிஷாரா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதேபோல், முன்னாள் பிரதமரின் ஆலோசகராக செயற்பட்ட எஸ்.பாஸ்கரலிங்கம் மற்றும் முன்னாள் வங்கி அதிகாரி ஒருவரிடமும் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் வாங்குமூலம் ஒன்றை பதிவு செய்துக் கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

—–

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மைத்திரிபால சிறிசேன இல்லாது செய்தது போல, ஐக்கிய தேசியக் கட்சியை ரணில் விக்கிரமசிங்க சின்னா பின்ன மாக்கிவிட்டார். எனவே, மலையக மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவு வழங்கவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தலவாக்கலையிலேயே அதிகளவு தமிழ் மக்கள் வாழ்கின்றனர். மலையகத்தின் இதயம் இந்த நகரம்தான். தலவாக்கலையை அடையாளப்படுத்திய பெருமை அமரர் சந்திரசேகரனையே சாரும். எனவே, இங்கு தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தமை சிறப்பான விடயமென கருதுகின்றேன்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளவர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கே வாக்களிக்கவேண்டும். அதிலும் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்கள் யாரென இனங்கண்டு அவர்களை ஆதரிக்கவேண்டும். தனித்து பயணித்தால் சாதிக்கமுடியாது. சமூகத்தின் நலன்கருதியே தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் பயணிக்கின்றோம்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்துக்குள் இன்று பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் எம்மை ஆதரிக்க நினைக்கின்றனர். அவர்களையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்கள் வந்தால் அவர்களையும் அரவணைத்துக்கொண்டே நாம் பயணிக்கவேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் 5 லட்சத்து 77 ஆயிரத்து வாக்குகள் உள்ளன. அதில் பதிவுசெய்யப்பட்ட அனைவரும் வாக்களிக்கப்போவதில்லை .எனவே, இருக்கின்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் வாக்களிக்கவேண்டியது வாக்காளர்களின் கடமையாகும்.

மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியை இல்லாது செய்ததாலேயே மொட்டு கட்சி உருவானது .அதேபோல் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியை இல்லாது செய்ய முற்படுவதாலேயே சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உருவானது. நாமும் அந்த கூட்டணியிலேயே இருக்கின்றோம். மக்கள் அந்த கூட்டணியையே ஆதரிக்க வேண்டும் என்றார்.

-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

Related posts