ரெகொபோத் ஊழியங்கள் – டென்மாhக்கிற்காக பிரார்த்திப்போம்.
சிறகொடிந்த பறவை…! அது வானில் பறக்குமா?
இது கதையல்ல நிஜம்.
என் வாழ்வில் மறக்க முடியாத அந்த நாள். 1986ம் ஆண்டு எகிப்தில், கெய்ரோ பட்டணத்தில் நடந்த உண்மைச் சம்பவம். அங்குள்ள ஆண்கள் சிறையை உடைத்து பல கைதிகள் தப்பி ஓடினார்கள். எங்கும் பதட்டமும் திகிலும் நிறைந்த சூழ்நிலை. அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த நானும் மின்னல் வேகத்தில் செயற்பட வேண்டிய நேரம். சிறைச்சாலையின் கொடுமை, தனிமை, இலங்கையில் சீரழியும் குடும்பம் இவையாவும் என் உள்ளத்தை உந்தித்தள்ள நானும் ஓட ஆரம்பித்தேன்.
எப்படியும் வெளிநாடு சென்று உழைத்து என் குடும்பத்தை காப்பாற்றியே தீரவேண்டும் என்ற வெறியுடன் ஓடினேன்.
தப்பியோடிய நாங்கள் நைல் நதிக்கரையில் ஒரு படகில் ஏறி வேகமாக கரைசெல்ல முயன்றோம். இரவு நேரம், நதியின் இரைச்சல், எந்நேரமும் சுட்டுக் கொல்லப்படலாம் என்ற பயம் ஒருபுறம் நெஞசை அழுத்த மரணமா, விடுதலையா என்று மனம் படபடத்த அந்த வேளையில் திடிரென மற்றக்கைதிகள் நைல் நதியில் பாய்ந்தார்கள். என்ன நடக்கிற தென்று தெரியாமல் நானும் பாய்ந்து நீந்த ஆரம்பித்தேன். அந்நாளில் பலர் மாண்டு போனார்கள். நானும் கரை சேரவில்லை. பொலீசாரால் பிடிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டேன்.
இலங்கையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த நான், வீட்டின் கடைசிப் பிள்ளை, செல்லப் பிள்ளை. எனக்கு 3 சகோதரன்களும், 3 சகோதரிகளும் உண்டு. இலங்கையின் யுத்தத்தில் குடும்பம் சிதைந்தது. மூத்த சகோதரனின் மரணம் பேரிடியாக குடும்பத்தின்மீது விழுந்தது. அதன் பின்னர் பல இழப்புக்களை குடும்பம் சந்திக்க வேண்டிவந்தது. அதன் நிமித்தமாக கனடா சென்று புடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பேராவவில் இந்தியா சென்றேன். பலரிடம் பணம்கட்டி முயற்சி செய்தேன். எல்லோராலும் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டு தனித்தவனானேன். நான் பட்ட துன்பங்கள் ஏராளம்.
போதைப்பொருள் கடத்திச் செல்லும்படி கேட்டார்கள். அப்பொழுது எனக்கு வயது 21. இனிப் பிழைக்க வேறு வழியில்லை. எப்படியாவது வாழவேண்டும் என்ற துடிப்பு மேலோங்க போதைப் பொருளைக் கடத்த சம்மதித்தேன். இது தவறான செயல் என்ற உணர்வற்றவனாக போதைப் பொருளுடன் எகிப்து சென்றேன். அங்கு சில நண்பர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு பொலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டேன்.
எகிப்து தேசத்தின் சிறைச்சாலையில் மிக மோசமான நிலையில் சரியான உணவு இல்லாமல், சொந்த பந்தங்கள் நண்பர்கள் யாரும் இல்லாத நிலையில் பல வருடங்கள் தனிமையில் வாடினேன். அங்குள்ள முகமதிய நண்பர்களுடன் சேர்ந்து அல்லாவைத் தொழுது கொண்டு வந்தேன். வேறு எந்த தெய்வத்தின் நினைவும் வரவில்லை. என் மனதின் வேதனை குறையவில்லை. எனது வழக்கை விசாரித்த நீதிபதி 20 வருடங்கள் தண்டனையளித்து தீர்ப்பளித்தார். என் துன்பமும் துக்கமும் அதிகரித்தது.
காற்றோட்டம் இல்லாத அழுக்கான ஒர சிறிய அறையில் 16 கைதிகள் தங்கியிருந்தோம். அறையின் மூலையில் ஒரு சிறிய கழிப்பறை. அந்த துர்மணத்தில் பலவருடம் கஸ்டங்களை அனுபவித்து வந்தேன். அந்நாட்களில் கடினவேலை செய்யும்படி வேறொரு சிறைக்கு மாற்றப்பட்டேன். அங்கு நான் சந்தித்த ஒர் கிறிஸ்தவ நண்பர் ஆறுதலாக என்னுடன் பேசுவார். கிறிஸ்துவின் அன்பைக் குறித்து பகிர்ந்து கொள்வார். அவருடைய அந்த வார்த்தைகள் இருளான அந்த சிறை வாழ்க்கைக்கு வெளிச்சம் தந்தது.
அவருடன் சேர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தேன். இயேசு கிறிஸ்துவின் அன்பையும், அவர்தரும் ஆறுதலையும் அனுபவித்தேன். சிறையில் எங்களைப் பார்த்து ஆறுதல் சொல்ல வரும் ஒரு பாஸ்டரிடம் பைபிள் வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அந்நாளில் இருந்து என்வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. உலகம் தரமுடியாத ஓர் சமாதானம் என் உள்ளத்தை நிறைத்தது. சிறைச்சாலையின் துன்பங்கள் இலகு வானது போல தோன்றியது. இனம்புரியாத சந்தோசம், தைரியம் என்வாழ்வில் குடிகொண்டது. நான் ஒரு புதிய மனிதனாக மாறியது போல் உணர்ந்தேன். இன்றும் பல கஸ்டங்கள் உண்டு. ஆனாலும் அமைதியாக வாழ்கிறேன்.
நான் மட்டுமல்ல, இன்று என்னுடன் இருக்கும் பல தமிழர்கள் இன்னும் பல நாட்டவர்கள் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு அமைதியாக வாழ்வதை நான் காண்கிறேன். நாம் அனைவரும் தேவனை துதித்துப்பாடி மற்றவர்களுக்காக ஜெபித்து வருகிறோம். ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருந்து தேவனுடைய அன்புக்குள் வளர்ந்து வருகிறோம். ஞாயிற்றுக்கிழமைகளில் 15, 20 பேர் சிறையில் ஒன்றுசேர்ந்து ஜெபித்து வருகிறோம். அஞசல் வழியாக வேதாகம இறையியல் கற்றுவருகிறோம். இந்த சிறையில் என்னுடன் இருந்த 50 மேற்பட்டோர் பலவித நோய்களினால் மரித்து விட்டார்கள். ஆனால் தேவனுடைய மகாபெரிய கிருபையால் நான் உயிரோடு இருக்கிறேன். ஏதோவொரு திட்டத்தோடு தேவன் என்னை இச்சிறையில் வைத்து பயிற்றுவித்து வருகிறார் என்பதை மாத்திரம் என்னால் உணர முடிகிறது.
நான் சிறகொடிந்த பறவையாகவே இச்சிறையில் என் வாழ்வை ஆரம்பித்தேன். ஆனால் இப்பொழுது இயேசுகிறிஸ்துவுக்குள் சிறகடித்துப் பறக்க உதவி செய்த தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன்.
இதை வாசிக்கும் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பல துன்பங்களை அனு பவித்துக் கொண்டிருக்கலாம். எல்லாம் தோல்வியாக காணப்படலாம். இனிவாழ்ந்து என்ன பிரயோசனம் என்று நினைத்துக் கலங்கிக் கொண்டிருக்கலாம். நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள். இன்று இயேசுகிறிஸ்துவுக்கு உங்கள் வாழ்வில் ஒருதருணம் கொடுத்துப் பாருங்கள். உங்கள் துக்கம் சந்தோசமாக மாறும். இந்த கடினமான சிறை வாழ்விலும் எனக்கு நம்பிக்கையும், ஆறுதலும் அளித்து ஆசீர்வதிக்கிற தேவன் உங்களையும் ஆசீர்வதிப்பார்.
ஆதாரம்: சத்திய வசனம் இலங்கை.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark