சனிக்கிழமை அதிகாலை ஜம்மு காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் ஆயுதங்கள் நிரம்பிய பாகிஸ்தான் ட்ரோனை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
இதில் இன்னொரு பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கான ஆயுதங்கள் இருந்தன என்றும், இன்னொரு தாக்குதலுக்கான முயற்சியாக இருக்க வாய்ப்புள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பிஎஸ்எஃப் தலைமை ஆய்வாளர் என்.எஸ். ஜம்வால் கூறும்போது, “வீழ்த்தப்பட்ட ஹெக்ஸாகாப்டரில் (ட்ரோன்) அமெரிக்கத் தயாரிப்பு எம்.4 இயந்திரத் துப்பாக்கி, ஆயுதங்கள், 7 கிரனேடுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
பாகிஸ்தான் பக்கத்திலிருந்து இந்தியப் பகுதிக்குள் இந்த ஹெக்சாகாப்டர் பறந்து வந்தது. இந்தியப் பகுதிக்குள் 200-250 மீ வந்த பிறகு நாம் சுட்டு வீழ்த்தினோம். அப்போதுதான் அதில் எம்-4 செமி ஆட்டோமேட்டிக் அமெரிக்க இயந்திரத்துப்பாக்கி, 60 ரவுண்டுகளுக்கான குண்டுகள், 7 கிரனேடுகள் ஆகியவற்றைக் கைப்பற்றினோம்.
அந்த ட்ரோன் சுமார் 18 கிலோ எடை இருந்தது. அதில் 5-6 கிலோ எடைகொண்ட பொருட்கள் இருந்தன. இந்த ஹெக்சாகாப்டரின் பாகங்கள் சீன தயாரிப்பாகும்.
இதில் இருந்த ஆயுதங்கள் கிரெனேடுகளைப் பார்க்கும் போது இந்தியப் பக்கத்தில் ஒரு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் யாரோ இந்த ஆயுதங்களை பெறுவதற்கு காத்திருந்ததுபோல் தெரிகிறது. இதன் மூலம் பெரிய பயங்கரவாதத் தாக்குதலை திட்டமிட்டிருக்கலாம். ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல்முறை” என்றார்.