கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் வாக்குமூலம் பெறுமாறு பதில் பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் அரசியல் கூட்டமொன்றில் பேசிய முன்னாள் எம்.பி. விநாயமூர்த்தி முரளிதரன், தாம் ஒரே இரவில் ஆனையிறவில் வைத்து 2,000 – 3,000 இராணுவ வீரர்களை கொன்றதாக தெரிவித்திருந்தார்.
இம்முறை பொதுத் தேர்தலில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில், அகில இலங்கை தமிழர் மகாசபை எனும் கட்சியில் விநாயகமூர்த்தி முரளிதரன் போட்டியிடுகின்றார்.
‘சுமந்திரன் அரசியலில் நேர்சரி (அரிவரி) படிக்கின்றவர்: அவருக்கு ஆளுமை இல்லை: பட்டாசு கொழுத்திப்போட்டால் மாரடைப்பால் செத்திடுவார்’ என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக வாய்க்குவந்தமாதிரி பேசுகின்ற கருணா மனிதவர்க்கத்தை அழிக்கும் கொரோனாவை விட கொடியவர் என, த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்திருந்தார்.
அண்மையில் த.தே.கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரனுக்கு எதிராக கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் காரைதீவில் ஊடகஙகளுக்கு தெரிவித்த விமர்சனத்திற்கு பதிலளித்து மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், நாவிதன்வெளியில் இடம்பெற்ற கூட்டத்தின்போது உரையாற்றிய கருணா அம்மான், தான் கொரோனவை விட பயங்கரமானவர் என கிருஷ்ணபிள்ளை தெரிவித்த கருத்து உண்மேயே என்றும், ஆனையிறவில் ஒரே இரவில் 2,000 – 3,000 இராணுவத்தினரை கொலை செய்ததாக கருத்து வெளியிட்டிருந்தார்.