சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் பலியாகி உள்ளார்.ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ண கதி மற்றும் ரஜோரி நவ்ஷேரா பிரிவுகளில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் கத்துவா மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லை பகுதிகளில் திடீரென சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இதில் நவ்ஷேரா பகுதியில் இந்திய நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய வீரர் ஒருவர் பலத்த காயமுற்றார். பின்னர் அவர் உயிரிழந்து விட்டார். இந்த மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட 4வது நபர் இவராவார்.
கடந்த 4 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ரஜோரி மாவட்டத்தில் 2 வீரர்களும், கடந்த 14ந்தேதி பூஞ்ச் மாவட்டத்தில் வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் எல்லை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவது இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. இதன்படி, இந்த ஆண்டில் கடந்த 10ந்தேதி வரை, போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இந்தியா மீது 2,027 முறை பீரங்கி தாக்குதல்களை நடத்தியுள்ளது.