கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, இன்னும் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளவிருப்பது உறுதியாகியிருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையின் (United States Congress), எரிசக்தி மற்றும் வணிகத்துக்கான நிலைக்குழுவினர் (United States House Committee on Energy and Commerce) முன்னிலையில் சுகாதார நிபுணர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள் அந்த அபாயத்தின் அறிகுறிகளைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன.
இன்றைய தேதிக்கு அமெரிக்காவில் 24,24,492 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். 1,23,476 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், அதிபர் ட்ரம்ப்போ இவ்விஷயத்தில் தொடர்ந்து அலட்சியப் போக்கைக் கடைப்பிடிக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் ‘ஃபாக்ஸ் நியூஸ்’ செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “விரைவில் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட இருக்கிறது. தரமான சிகிச்சையையும் விரைவில் அடையவிருக்கிறோம்” என்று நம்பிக்கை தரும் விதத்தில் பேசியிருந்தார் ட்ரம்ப்.
ஆனால், அதே பேட்டியில், “கரோனா வைரஸ் தொற்று மறைந்து கொண்டிருக்கிறது” என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது (“கரோனா தொற்று மூன்று நாட்களில் பூஜ்ஜிய நிலைக்குச் சென்றுவிடும்” என்று தமிழக முதல்வர் சொன்னதை இங்கு பொருத்திப் பார்க்கலாம்!). ஏனென்றால் அதேநாளில்தான் அமெரிக்காவில் புதிதாக 20,000 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்ல, “பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதால்தான், தொற்றுகளின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது. எனவே, பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றும் சொல்லி அதிரவைத்தார் ட்ரம்ப் (‘பரிசோதனைகள் அதிகரிப்பதால்தான் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது. பயப்பட வேண்டாம்’ என்கிற ரீதியில் தமிழக அரசின் சார்பில் சொல்லப்பட்ட வார்த்தைகளை இங்கு பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம்!).
பெருந்தொற்று போன்ற அபாயத்தைக் கையாளும் விஷயத்தில் ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தனம் மக்களிடம் பதற்றத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்திவிடும். அதுபோன்ற சமயங்களில் அவற்றை மறுதலித்து, அறிவியல்பூர்வமான உண்மைகளைச் சொல்ல வேண்டிய கடமை சுகாதாரத் துறை நிபுணர்களுக்கு இருக்கிறது. அதை மிகச் சரியாகச் செய்துகொண்டிருக்கிறார்கள் அமெரிக்க சுகாதார நிபுணர்கள்.
கரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் விஷயத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை நிபுணர்கள், செனட் உறுப்பினர்கள் முன்னிலையில் நேற்று விளக்கமளித்தார்கள். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட டாக்டர் ஆன்டனி ஃபவுசி, “பெரும்பாலானோர் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. பரிசோதனை, தொற்றுக்குள்ளானோரின் தொடர்புகளின் தடமறிதல் போன்றவை தொடர்பான விஷயங்களில் பல மாநிலங்களிடம் சரியான திட்டமிடல் இல்லை” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். இவர் கரோனா பரவல் தொடர்பாக அரசுக்கு வழிகாட்டும் குழுவில் முதன்மையானவர்.
கரோனா வைரஸ் அத்தனை எளிதில் மறைந்துவிடாது என்று சுட்டிக்காட்டிய ஃபவுசி, “அடுத்து வரும் சில வாரங்களில் ஃபுளோரிடா, டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரிக்கவிருப்பது அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக இருக்கும்” என்றும் எச்சரித்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற, நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்டு கூறியிருக்கும் தகவல் இந்த ஆபத்தின் வீரியத்தை உணர்த்துகிறது. இந்த ஆண்டின் குளிர்காலம் தொடங்கும்போது, வழக்கமான சளிக்காய்ச்சல் (Flu) போன்ற நோய்கள் ஏற்படும். அவற்றுடன் கரோனா பாதிப்பும் சேர்ந்துகொள்ளும்போது விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கரோனாவுக்கான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிவரை அல்லது 2021 ஆரம்பம் வரை தயாரிக்கப்பட வாய்ப்பில்லை என்பதை உறுதியாகச் சொல்லியிருக்கும் ஃபவுசி, அதுவரை கரோனாவுக்கான மருந்துகள் என்ற பெயரில் மருத்துவரீதியில் நிரூபணம் செய்யப்படாத மருந்துகள் சந்தைக்கு விற்பனைக்குச் செல்வதை அரசு நிர்வாகம் தடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார் (இந்தியாவில் ஆளாளுக்குக் கரோனா மருந்து என்று கிளம்பியிருப்பது கவனிக்கத்தக்கது!)
5 மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்த இந்தக் கூட்டத்தில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதங்கள் நடந்திருக்கின்றன.
உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறுவதாக ட்ரம்ப் எடுத்த முடிவை விமர்சித்ததுடன், சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவல் தொடங்கியதன் பின்னணி தொடர்பாக ஆய்வு நடத்தி வந்த குழுவுக்கு 3 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதை, அரசின் அழுத்தத்தின் பேரிலேயே ரத்து செய்ய வேண்டிவந்ததாகவும் இந்தக் கூட்டத்தில் அதிருப்தியுடன் தெரிவித்திருக்கிறார்கள் சுகாதார நிபுணர்கள்.
அரசு நிர்வாகத்தின் அங்கமாக இருந்தாலும், ஆட்சியாளர்கள் தவறான முடிவுகள் எடுக்கும்போது அவற்றை மறுத்து அறிவுபூர்வமாக விளக்கமளிக்கவும், ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தவும் டாக்டர் ஃபவுசி போன்ற சுகாதார நிபுணர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அதுமாதிரியானவர்கள் எல்லா நாடுகளுக்கும் தேவை!