கிழக்கு லடாக் எல்லையில் பதற்றமான இடங்களில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இந்தியா, சீனா ராணுவத்தின் கமாண்டர் அளவில் 11 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ம் தேதி இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.
கல்வான் எல்லைப்பகுதி எங்களுக்குச் சொந்தமானது. அதில் இறையாண்மை இருக்கிறது” என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய அரசு, சீனாவின் பேச்சை ஏற்க முடியாது. அது மிகைப்படுத்தப்பட்டது என்று மறுப்புத் தெரிவித்தது.
மேலும், சீனாவின் அத்துமீறல் நடவடிக்கை, இரு நாட்டு உறவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு சீன ராணுவம் நேரடியாகவே பொறுப்பேற்க வேண்டும் என இந்தியா சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த பிரதமர் மோடி, “இந்தியாவின் எந்தப் பகுதியையும், எந்த எல்லையையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை. இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாக்க ராணுவம் எந்த நேரத்திலும் தகுந்த பதிலடி கொடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் சீனா அத்துமீறலில் ஈடுபட்டால் ஆயுதங்களைக் கொண்டு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், ஆயுதங்கள் வாங்குவதற்காக அவசரநிதியாக முப்படைக்கும் ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் மத்திய அரசு வட்டரங்கள் தெரிவித்தன
இந்த சூழலில் எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்திய ராணுவம் தரப்பில் லெப்டினனெட் ஜெனரல் ஹரிந்தர் சிங், சீனாவின் திபெத் ராணுவம் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இடையே இந்த பேச்சு கடந்த இரு நாட்களாக நடந்தது.
இரு நாட்டு ராணுவ கமாண்டர்களுக்கு இடையிலான இந்தப ேபச்சுவார்த்தை நேற்று 11 மணிநேரம் நடந்து, நள்ளிரவுவரை நீடித்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தை சீனப்பகுதியான சூசுல் எனுமிடத்தில் உள்ள மோல்டோ பகுதியில் நடந்துள்ளது
இந்த பேச்சின் முடிவில் கிழக்கு லடாக் எல்லையில் பதற்றமான பகுதிகளில் இருநாட்டு ராணுவமும் நிறுத்தியுள்ளபடைகள் அனைத்தையும் திரும்பப்பெற்று, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாகவும், சாதகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நடந்தது. இருதரப்பு படைகளும் பரஸ்பரத்துடன் திரும்பப்பெற ஒப்புக்கொண்டன. பதற்றான இடங்களில் இருந்து படைகள் திரும்பிச் செல்வார்கள், இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன