சினிமாவில் கஷ்டப்பட்டு உயர்ந்தேன்” என்று டைரக்டர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
டைரக்டர் பாக்யராஜ் இணையதள கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சினிமா அனுபவங்களை பகிர்ந்தார். அவர் கூறியதாவது:-
“நான் சிறு வயதிலேயே கிராமத்து பெரியவர்கள் சொல்லும் கதைகள் கேட்டு வளர்ந்தேன். அப்போது சினிமா பார்ப்பது மட்டும்தான் பொழுதுபோக்கு. இதனால் எனக்கு சினிமா மீது பற்று வந்தது. நாமும் எம்.ஜி.ஆர். சிவாஜி போல் ஆக முடியாதா என்று யோசித்தேன். நாடகத்தில் நடித்தேன்.
அதன்பிறகு சினிமாவில் சேர சென்னை வந்தேன். சினிமா யாரையும் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கவில்லை. நிறைய கஷ்டப்பட்டேன். அந்த கஷ்டங்கள் சினிமாவில் கதை எழுதும்போதும் வசனம் எழுதும்போதும் படம் இயக்கும் போதும் எனக்கு உதவியாக இருந்தன. எனது டைரக்டர் பாரதிராஜாவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். அவர் ஒரு வெறியோடு வேலை பார்த்தார். ஜெயித்தார். நானும் அப்படித்தான். நம்பிக்கை மட்டும்தான் எனக்கு பலமாக இருந்தது.
நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எம்.ஜி.ஆர். படம், சிவாஜி படம் என்றனர். அதன்பிறகு இது ஸ்ரீதர் படம் , பந்துலு படம், பீம்சிங் படம். இது எஸ்.பாலசந்தர் படம் என்றார்கள். பிறகு அவருடைய சந்ததிகள் மாதிரி நாங்கள் வந்தோம். பாக்யராஜ் படம் என்று சொல்வது பற்றி பெரிதாக எதுவும் நினைக்கவில்லை. வாழ்க்கையில் எதை பார்த்தேனோ அதைத்தான் கருவாக எடுத்து படத்தில் வைத்தேன். என் படங்களில் வில்லனுக்கு அதிகம் வேலை இருக்காது. பிரச்சினைகள்தான் வில்லனாக வரும்.”
இவ்வாறு பாக்யராஜ் கூறினார்.