CID யில் ஆஜராக கருணா அம்மான்

விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மான் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

அம்பாறை பகுதியில் வைத்து கடந்த 23 ஆம் திகதி அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

குறித்த கருத்து தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுரைக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தான் கொரோனாவை விட பயங்கரமானவர் எனவும் ஆணையிறவில் ஒரே இரவில் இரண்டு மூவராயிரம் இராணுவத்தினரை கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

——

கருணா அம்மான்’ என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்வதற்கான உத்தரவை பொலிஸாருக்கு பிறப்பிக்குமாறு கோரியே, சமூக செயற்பாட்டாளரும் ஆசிரியருமான பி.கலஹெபத்திரண இம்மனுவை இன்று (25) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அத்தோடு, அண்மையில் அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலில் திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்தில், அகில இலங்கை தமிழர் மகாசபை எனும் கட்சியில் போட்டியிடும், முன்னாள் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன், அண்மையில் கூட்டமொன்றில் உரையாற்றியபோது, கொரோனாவை விட கொடூரமானவன் என, காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்த கருத்து உண்மையே என்றும், ஆனையிறவில் ஒரே இரவில் 2,000 – 3,000 இராணுவத்தினரை கொலை செய்ததாகவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

பி.கலஹெபத்திரண இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளதோடு, அதில் சட்ட மா அதிபர், கருணா அம்மான், பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக விடுதலைப் புலிகளின் தலைவரும் கேர்ணலுமாக இருந்த கருணா அம்மான், தான் செய்த குற்றங்களை ஒத்துக்கொண்டுள்ளதாக கருதப்படுவதாக, தனது மனுவில் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் இவ்வாறான குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தண்டனைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது என மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts