சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருடைய மரணத்துக்கு இயக்குநர் சேரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ் (56). இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). கடந்த 19-ம் தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாக இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பென்னிக்ஸும், ஜெயராஜும் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணைக் கைதியாக இருந்த அவர்களின் உயிரிழப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
தற்போது இது தொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“காவல்துறை என்றாலே அடித்து சித்ரவதை செய்வதுதான் என்ற எண்ணத்தை உருவாக்கும் சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகள் போன்றோரின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக உயர் போலீஸ் அதிகாரிகள் கண்டிப்புக் குரல் எழுப்ப வேண்டும்.. இங்கே இறந்த இருவருக்கான நீதி என்பதைத் தாண்டி இனி ஒருவர் இதுபோல உயிரிழக்கக்கூடாது.
அதன் உதாரணமாக இந்தப் புகாரை நீதிபதிகள் விசாரித்து கொடுக்கும் கடும் தண்டனை மூலமாக நீதியும் சட்டமும் காப்பாற்றப்படவேண்டும். காவல்துறை மக்களைப் பாதுகாக்க அன்றி உயிரைப் பறிக்க அல்ல என்பதை முதலில் இதுபோன்ற காவலர்களுக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் மக்கள் காவல்துறையை நம்ப மறுப்பார்கள்.
மனித உரிமைக் கழகமும் மக்களும் இந்த அவமானச் செயலுக்கு தகுந்த பாடம் புகட்ட தங்கள் எதிர்ப்புக் குரலை உயர்த்த வேண்டும். நீதியின் தீர்ப்பு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் தவறை நிரூபிக்கும் பட்சத்தில் அரசு அவர்களுக்கான கடுமையான தண்டனையை நிறைவேற்றி மக்களுக்கான அரசு என நம்பிக்கை தர வேண்டும்”.
இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.