தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை பூர்ணா. கேரளாவை சேர்ந்த இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். மலையாள படங்களில் இவரது திரை பயணம் தொடங்கி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
இவர் தமிழில், கந்தக்கோட்டை, ஆடு புலி, வித்தகன், கொடிவீரன், காப்பான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு, மும்மொழியில் தயாராகும் தலைவி என்ற பெயரிலான படத்தில் முக்கிய வேடமேற்று நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 24ந்தேதி நடிகை பூர்ணாவின் தாயார் ரவுலா கேரளாவின் மராடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். இந்த புகாரில், தனது மகளை 6 பேர் கொண்ட கும்பல் மிரட்டினர் என தெரிவித்து உள்ளார். இந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் உடனடியாக செயல்பட்டனர். இதில் ரபீக், சரத், அஷ்ரப் மற்றும் ரமேஷ் ஆகிய 4 பேர் அன்றைய தினத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
நடிகை பூர்ணாவை, முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ரபீக் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் நடப்பதற்கு முன், வேறொருவரின் புகைப்படம் ஒன்றை நடிகை பூர்ணாவிடம் காட்டி, ரபீக் மோசடி செய்துள்ளார். இதன்பின் கடந்த 3ந்தேதி, தனது கூட்டாளிகளுடன் மராடுவில் உள்ள பூர்ணாவின் வீட்டுக்கு சென்ற ரபீக், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். பின்னர் பூர்ணாவின் வீடு, வாகனம் ஆகியவற்றை வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக, நடிகை பூர்ணாவை ரபீக் மிரட்ட தொடங்கியுள்ளார். தனக்கு ரூ.1 லட்சம் பணம் தரவேண்டும். இல்லையெனில் பூர்ணாவின் தொழிலையே அழித்து விடுவேன் என மிரட்டியுள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகாரின்பேரில் போலீசார் உடனடியாக செயல்பட்டனர். இதில் ரபீக், சரத், அஷ்ரப் மற்றும் ரமேஷ் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. மற்ற 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், நடிகை பூர்ணாவை மிரட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதுபற்றி எர்ணாகுளம் துணை காவல் ஆணையாளர் பூங்குழலி கூறும்பொழுது, நடிகை பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்த மற்றும் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு பாலக்காடு மாவட்டத்தில் இருந்த முக்கிய குற்றவாளி முகமது ஷெரீப் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.