கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கு இந்திய ராணுவம் சார்பில் தகுந்த பதிலடி தரப்பட்டுள்ளது. துணிச்சல் மிகுந்த நமது வீரர்கள் இந்தியாவின் கவுரவத்துக்கு களங்கம் வரவிடமாட்டார்கள் என்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.
அதில் அவர் பேசியதாவது:
”இந்த ஆண்டின் பாதி நாட்கள் கடந்துவிட்டன. ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதித்துவிட்டோம். இப்போது பொதுவாக மக்கள் எப்போது 2020-ம் ஆண்டு முடியப்போகிறதோ என்று கேட்கிறார்கள். இந்த ஆண்டு பல்வேறு சோதனைகளைத் தந்த ஆண்டாக மக்கள் நினைக்கிறார்கள்.
எந்த விதமான சவால்கள் நமக்கு வந்தாலும், இந்த ஆண்டைக் குறைசொல்லக்கூடாது. அனைத்துவிதமான சவால்களையும் வெற்றிகரமாகக் கடந்து இந்திய வரலாற்றில் பலர் இடம் பிடித்துள்ளார்கள்.
கிழக்கு லடாக் எல்லையில் நமது எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டவர்களுக்குத் தகுந்தபதிலடி தரப்பட்டுள்ளது. எல்லையையும், இறையாண்மையையும் பாதுகாப்பதில் இந்தியாவின் வலிமையான நிலைப்பாட்டை உலக நாடுகள் பார்த்துள்ளன.
நட்புறவுக்கு இந்தியா மரியாதை அளிக்கும். ஆனால், எந்தவிதமான அத்துமீறல் இருந்தாலும் எந்தவிதமான தயக்கமும் இன்றி பதிலடி கொடுப்போம். (சீனாவின் பெயரைக் குறிப்பிடவில்லை) துணிச்சல் மிகுந்த நமது வீரர்கள் இந்தியாவின் கவுரவத்துக்கு களங்கம் வர விடமாட்டார்கள்.
வீரம்மிகுந்த நமது ராணுவத்துக்கு இந்தியா தலைவணங்குகிறது. ராணுவம்தான் இந்தியாவைப் பாதுகாப்பாக வைத்துள்ளது. அவர்களின் வீரம் எப்போதும் நினைவில் கொள்ளப்படும்.
நம்முடைய தேசத்தை வலிமையாகவும், தற்சார்பு உடையதாகவும் மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுதான், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.
மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்கான கோஷம் மக்கள் மத்தியில் வலுத்துள்ளது. இது தேசத்தை வலிமையாக்கி, முன்னேற்றத்தில் கொண்டு செல்லும்.
எந்த இயக்கமும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் வெற்றி பெறாது. ஒரு குடிமகனாக நான் கேட்கிறேன், இந்தியா தற்சார்பு பொருளாதாரத்தில் நோக்கி நகர அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
கரோனா வைரஸ் பாதிப்பில் லாக்டவுனைத் தளர்த்தும் காலத்தில் இருக்கிறோம். இன்னும் நாம் கூடுதல் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். ஊரடங்கு காலத்தில் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
நிலக்கரி, விண்வெளி, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. அனைவரும் கூட்டாகச் சேர்ந்து உழைத்து தேசத்தை சுயச்சார்பு உள்ளதாகவும், தொழில்நுட்பத்தில் முன்னேற்றமடைந்த நாடாகவும் மாற்ற உதவ வேண்டும்”.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.