உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 26

இளைப்பாறுதலின் வழி.
சகோதரன்.பிரான்சீஸ அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறு தலுக்குத் திரும்பு. சங் 116:7
இன்று இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஏற்படும் நிலைமை மீண்டுமாக மக்கள் அமைதியை, இளைப்பாறுதலை, சமாதானத்தை இழந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதுபோல உணரவேண்டிய கட்டாயம் ஏற்ப்படுவதை நீங்களும் நானும் காணக்கூடியதாக உள்ளது. சுயத்தின் செயல்கள் மக்களை கதிகலங்க வைக்கிறது. பயந்த சூழலில் வாழ்ந்த இருவரின் அனுபவங்களை இந்த தியானத்தின் ஊடாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வேதத்தில் இரண்டுபேர் தங்கள் ஆத்துமாவோடு பேசிக்கொண்டார்கள். பழைய ஏற்பாட்டில் தாவீதும், புதிய ஏற்பாட்டில் ஒரு ஐசுவரியவானும். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, அவர்களின் பேச்சில் வெளிப்பட்ட இருதயத்தின் நோக்கத்தை. ஐசுவரியவான் ஆத்துமாவே வயல்வெளி நிலங்களெல்லாம் நன்றாய் விளந் திருக்கிறது. நீ புசித்துக்குடித்து நன்றாகஇரு என்று சொன்னான். ஆனால் நமது ஆண்டவராகிய கர்த்தரோ அவனை மதிகேடனே என அழைத்தார் லூக்கா 12:20.

ஆனால் பழையஏற்பாட்டில் தாவீது தன்ஆத்துமாவைப் பார்த்து, கர்த்தரை ஸ்தோஸ்த்திரி, அவர்செய்த சகல உபகாரங்களையும் மறவாதே என பேசினார். அதுமட்டுமல்லாமல் ஆத்துமா கலங்கிய வேளயில், என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய், ஏன் எனக்குள் திகைக்கிறாய், தேவனை நோக்கி காத்திரு என்று சொல்லி தன்னைத்தானே திடப்படுத்திக் கொண்டார். சங் 42:5.

மீண்டும் அவர் தன் ஆத்துமாவைப் பார்த்து பேசுகிறதை சங். 116.7 இல் காணலாம். என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால் நீ உன் இளைப்பாறு தலுக்குத் திரும்பு.

தாவீது தனது இளமைப்பருவத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபடியால் அதிக நேரம் தனிமையை அனுபவிக்க வேண்டியதாக இருந்தது. அதனால் அவர் தனது ஆத்துமாவோடு அதிகம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் ராஜாவாகி விட்டபோதும் தனது துயரங்களை மற்றவர்களோடு பேசிக்கொண்டால் விபரீதமான சூழ்நிலை ஏற்படலாம் என்று நினைத்து எப்போதும் தனது ஆத்துமாவோடே பேசிக் கொண்டிருப்பார். என் ஆத்துமாவே, உன் இளைப்பாறுதலுக்குள் திரும்பு. இருதயம் கலங்கிக்கொண்டிருந்தது போதும். பயஉணர்வு வாட்டி வதைத்தது போதும். மற்றவர்கள் செய்த துரோகங்களை எண்ணி எண்ணி கலங்கியது போதும். இளைப் பாறுதலுக்கு திரும்பு. ஆம், நமது வேதனைகளை நாம் நீடிக்க விடக்கூடாது.

உலகத்தில் பெரிய ஆசீர்வாதம் இளைப்பாறுதல். கவலையும் கண்ணீரும் நிறைந்த இந்த உலகத்தில் தேவ சமூகத்தில் இளைப் பாறுகிறவர்கள் பாய்கியவான்கள். நமது கர்த்தராகிய தேவன் மட்டும் தம்மை அண்டியவர்களை அன்போடு அரவணைத்து, சமாதானத்தையும், சந்தோசத்தையும், இளைப்பாறுதலையும் அளிக்கிறவர். அதனால் தேவனற்ற மக்களுக்கு இளைப்பாறுதலைப் பெற வழிதெரியாமல் தம் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள். (ஐரோப்பாவில் வாழும் தமிழர்களில் அநேகர் அமைதி – இளைப்பாறுதல் தேடி இந்தியாவில் இருந்து வரும் மாந்திரிகர்களிடம் அகப்பட்டு அவலப்படுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது). இது எவ்வளவு வேதனைக் குரியது.

அலைகள் நேயர்களான உங்களுக்கு மிக இலகுவான மூன்று வழி முறைகளை வேதத்தினூடாக தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவற்றைப பின்பற்றி தேவனிடத்தில் இருந்து இலகுவான முறையில் இளைப்பாறுதலை அடைந்து கொள்ளும்படியாக அன்புடன் அழைக்கிறேன்.

1. இயேசு தரும் இளைப்பாறுதல்!

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்.11:28

பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் (கிறிஸ்துவுக்கு முன்) கர்த்தர் இளைப்பாறுதலை நமக்கு வாக்குப்பண்ணியுள்ளார். (யாத்.33.14) புதிய ஏற்பாட்டுக்காலத்திலும் (கிறிஸ்துவிற்குப்பின்) இளைப்பாறுதலை தேவன் வாக்குப்பண்ணியுள்ளார். ஆகவே இளைப்பாறுதல் நம்முடைய பிறப்புரிமை. கர்த்தர் நமக்காகக் கொடுத்த சிறப்பான வாக்குத்தத்தம். அது தெய்வீக ஆசீர்வாதங்களில் ஒன்றாகும். – என்னிடத்தில் வாருங்கள் – ஆம் அதுதான் ஆண்டவர் இளைப்பாறுதலுக்காக வைத்திருக்கும் ஒரு வழி. வீணாக வருத்தப்பட்டு பாரம்சுமந்து அலைந்து கொண்டிருக்க வேண்டாம். இயேசுவிடம் வாருங்கள்.

எப்படியான சுமைகளாக இருந்தாலும் ஆறுதலைத்தரும் இடம் தேவனிடத்தில் உள்ளது. அதுதான் சிலுவையண்டை. இயேசு கல்வாரிச்சிலுவையில் நமது பாவங்களைச் சுமந்தார். நம்முடைய அக்கிரமங்களைச் சுமந்தார். நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். (ஏசாயா 53:4,11,12) நம்முடைய பெலவீனங்களையும் நோய்களையும் சுமந்தார். நம்முடைய சாபங்களைச் சுமந்தார். அவர் ஏற்கெனவே சுமந்துவிட்டார். நாம் சுமக்கத்தேவையில்லை.

இன்று அநேகர் தங்களுடைய பாரங்களை கர்த்தர்மேல் வைக்காமல் தாங்கள் சுமப்பதனால் இருதயம் தோய்ந்து போகிறார்கள். கர்த்தர்மேல் உன்பாரத்தை வைத்துவிடு அவர் உன்னை ஆதரிப்பார். (சங்:55:22) அவர் உங்களை விசாரிக்கிற வரானபடியால் உங்கள் கவலைகளை எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1பேது.5:7). இன்றைய உலகில் மனுக்குல த்திற்கு உண்மையான இளைப்பாறுதல் இயேசுவின் சிலுவை அண்டையில்தான் கிடைக்கிறது. நம்முடைய எல்லாப் பிரட்சனை கள், பாடுகள், துயரங்கள், பாரங்கள் எல்லாவற்றையும் இறக்கி வைக்கக்கூடிய இடம் இயேசுவின் சிலுவைதான். ஆகவே சிலுவை நாயகன் இயேசுவிடம் வந்து இளைப் பாறுதலை கண்டு கொள்வோம்.

2. தேவசமூகம்தரும் இளைப்பாறுதல்!

என்சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன். யாத்.33:14
தேவசமூகத்தில் இருக்கும் இளைப்பாறுதல் கோணலானவைகளை நேராக்கும், செவ்வையாக்கும். தடைகளை தகர்த்தி பாதைகளை உண்டாக்கும். எவ்வாறு என நீங்கள் நினைக்கலாம். நாம் தேவ சமூகத்தை நாடும்போது பல ஆயிரக்கணக்கான தேவதூதர்களின் பிரசன்னம் நம்மைச் சூழவருகிறது. அவருடைய வல்லமையுள்ள பராக்கிரமம் நம்மைச் சூழவருகிறது. அப்பொழுது நம்மை வேதனைப்படுத்தம் சகல காரியங்களும் நம்மை விட்டு அகன்று போகும்.

எப்படி வாழ்வில் தேவபிரசன்னத்தை கண்டுகொள்வது என நீங்கள் கேட்கலாம். தேவனுடைய வார்த்தையை வாசித்து, தியானித்து, துதித்து ஸ்தோத்திரம் செய்யும் போது நிச்சயமாக தேவ பிரசன்னம் இறங்கிவரும். நாம் தொடர்ந்து தேவனை ஆராதிக்கும்போது அவரின் சமூகமும் அவரின் மகிமையும் நம்மைச் சூழ்ந்து கொள்ளும். அப்பொழுது தேவன் இளைப் பாறுதலை மட்டுமல்ல, விடுதலையையும் தருவார். அந்த விடுதலைமூலம் தெய்வீக சமாதானம் நம்மைச் சூழ்ந்து கொள்ளும்.

3. மனத்தாழ்மை தரும் இளைப்பாறுதல்!

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன். என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாவிற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். மத்.11:29.

இளைப்பாறுதலின் வழி மனத்தாழ்மை என அறியாமல் பலர் வேதனைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். அதன் நிமித்தமாக பலர் தங்கள் வாழ்கையில் அமைதியை இழந்து, குடும்பம் மனைவி பிள்ளைகள் மத்தியில், இனம்புரியாத பயத்துடனும், திகிலுடனும, நிந்தையுடனும்; வாழவேண்டி உள்ளது. உள்ளம் கலங்கும்பொது ஒருபோதும் சமாதானமாக இருக்க முடியாது. குறுக்கு வழியில், பாவவழியில் இன்பத்தை அடைவதன்மூலம் சமாதானத்தை அடையமுற்பட்டால் அது பின்னர், இருக்கம் சமாதானத்தையும் அழித்துவிடும். தேவனைச்சார்ந்து மனத்தாழ்மையுடன் இளைப்பாறுதலை அடையும்போது, தெய்வீக சந்தோசத்தையும், நிரந்தர சமாதானத்தின்மூலம்தையும் அடைந்து கொள்ளலாம்.

இயேசுவின் மரணத்தை நினைவுகூரும் ஒவ்வொரு வேளையிலும் அவர் எனக்கு இளைப்பாறுதலைத்தர சிலுவை மரணத்தை ஏற்றுக் கொண்டார் என்ற உண்மையை இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதனை அறிக்கை செய்து, தேவனை அண்டிவாழ உன்னை ஒப்புக்கொடு. அப்பொழுது இளைப்பாறுதலை கண்டுகொள்ளலாம்.

அன்பின் பரலோக பிதாவே, நீர் எனக்கு இளைப்பாறுதலைக் கொடுக்கும்படியாக சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டீரே, நன்றி அப்பா. இதுவரை காலமும் அதனை அறியாது வாழ்ந்ததற்காக என்னை மன்னியும். இன்றிலிருந்து உமது இளைப்பாறுதலுக்குள் அமைதியாக வாழவழி செய்து என்னை காத்து வழிநடத்தும் பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Related posts