காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்கு மிகவும் வேதனைப்படுவதாக இயக்குனர் ஹரி .கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவில் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இயக்குனர் ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்கு மிகவும் வேதனைப்படுவதாகவும் காவல்துறையில் உள்ள சிலரின் அத்துமீறலால் ஒட்டுமொத்த துறைக்குமே களங்கம் ஏற்பட்டுள்ளது என்றும் இனி இது போன்ற ஒரு கொடூர சம்பவம் தமிழகத்தில் நடக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.