சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்ட செல்போன் கடை வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த சம்பவத்துக்கு எதிராக இந்திப்பட நடிகர்-நடிகைகள் குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது.
நடிகை பிரியங்கா சோப்ரா:- சம்பவத்தை கேள்விப்பட்டு நான் அதிர்ச்சியும், கவலையும், கோபமும் அடைந்தேன். குற்றம் எதுவாக இருந்தாலும், எந்த மனிதரிடமும் இத்தகைய மிருகத்தனத்தை காட்டக்கூடாது. தவறு செய்த போலீசார், தண்டனையில் இருந்து தப்பிக்கக்கூடாது. பலியானவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு வேதனை அனுபவிப்பார்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு வலிமை கிடைக்கட்டும். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க கூட்டாக குரல் கொடுப்போம்.
நடிகை கரீனா கபூர்:- எந்த சூழ்நிலையிலும் இத்தகைய மிருகத்தனத்தை அனுமதிக்க முடியாது. நீதி கிடைக்கும்வரை நாம் தொடர்ந்து பேச வேண்டும். மீண்டும் இதுபோல் நடக்காதவாறு பாடுபட வேண்டும்.
நடிகை டாப்சி:- சம்பவம் மிகவும் அச்சமூட்டுகிறது. இருவருக்கும் நீதி வேண்டும்.
நடிகை பரினீதி சோப்ரா:- நமக்கு ஆபத்து என்றால் போலீசிடம் செல்வோம். போலீசே இப்படி நடந்து கொண்டால் என்ன செய்வது? சம்பந்தப்பட்ட ஒவ்வொரு போலீஸ்காரரும் இதற்கான விலையை கொடுக்க வேண்டும். தந்தையும், மகனும் பட்ட வேதனையை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.
நடிகர் ரிதேஷ் தேஷ்முக்:- தேசிய வெட்கக்கேடான சம்பவம். இதை படித்தபோதே என் முதுகுத்தண்டு நடுங்கிவிட்டது. இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
நடிகர் வீர் தாஸ்:- இந்த மரணம், கொடூரமானது. போலீஸ் நடந்து கொண்டது தவறானது. ஊர், அரசியல் நம்பிக்கை போன்றவற்றை கடந்து, அனைவரும் விரைவாக நீதி கிடைக்க குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.