‘பிகில்’ படத்தின் சாதனையை முறியடித்துப் புதிய சாதனையைப் படைக்க சில காலம் எடுக்கும் என்று ஏஜிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘பிகில்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்த அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். நயன்தாரா, டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர், ஜாக்கி ஷெராஃப், வர்ஷா பொல்லாமா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருந்தனர்.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி இப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக ‘பிகில்’ மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு ‘பிகில்’ படத்தால் ரூ.20 கோடி நஷ்டம் எனத் தகவல் வெளியானது. அதற்கு ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி மறுப்பு தெரிவித்திருந்தார்.
தற்போது கரோனா ஊரடங்கில் ‘பிகில்’ படத்தின் வசூல் தொடர்பான கேள்விக்கு அர்ச்சனா கல்பாத்தி கூறியிருப்பதாவது:
” ‘பிகில்’ படத்தின் மூலம் எங்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என்று நான் கூறியதாக சிலர் ஒரு அறிக்கையைப் பதிவிட்டு வருகின்றனர். அது உண்மையல்ல. நாங்கள் லாபம் ஈட்டி, அதற்கான வரிகளையும் கட்டியிருக்கிறோம். ‘பிகில்’ ஒரு பிளாக்பஸ்டர், அதுமட்டுமின்றி இன்னொரு படம் ‘பிகில்’ படத்தின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைக்க சில காலம் எடுக்கும்.”
இவ்வாறு அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.