நடிகை பிரியங்கா சோப்ரா, அமேசான் நிறுவனத்துடன் 2 வருட ஒப்பந்தம் போட்டுள்ளார். பல மில்லியன் டாலர் மதிப்புடைய இந்த ஒப்பந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கானது.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பிரியங்கா, “இந்தச் செய்தியை உங்களிடம் பகிர்வதில் மிகுந்த உற்சாகமும், பெருமையும் அடைகிறேன். எதிர்நோக்கியுள்ளேன். கைவசம் நிறைய பணிகள் உள்ளன. அற்புதமான பார்ட்னர்களாக இருக்கும் ஜெனிஃபார் சால்கே உள்ளிட்ட அமேசான் அணியினருக்குப் பெரிய நன்றி. திறமையும், நல்ல படைப்பும் எந்த எல்லைக்கும் உட்படாதவை என்ற எனது நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 2015-ம் வருடம், பர்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பிரியங்கா, உலகம் முழுவதிலிருமிருந்து அற்புதத் திறமைகளை வைத்து, மிகச்சிறந்த படைப்புகளை உருவாக்குவதே தன் நோக்கம் என்று கூறியுள்ளார். இதுதான் தனது தயாரிப்பு நிறுவனத்தின் ஜீவன் என்றும், அமேசானுடனான அடுத்த கூட்டு முயற்சிக்கு அஸ்திவாரம் என்றும் பிரியங்கா கூறியுள்ளார்.
மேலும், “ஒரு கதைசொல்லியாக, சுவாரசியத்தோடு சேர்ந்து மனங்களை, பார்வைகளைத் திறக்கும் புதிய சிந்தனைகளைத் தொடர்ந்து ஆராய்வதே எனது தேடல். எனது இந்தப் பயணத்தில் இதுநாள் வரை பெரிய பங்காக இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி” என்று பிரியங்கா கூறியுள்ளார்.
தனது ஹாலிவுட் தொழில் வாழ்க்கையை ‘குவாண்டிகோ’ என்ற தொடர் மூலம் பிரியங்கா தொடங்கினார். ‘பே வாட்ச்’, ‘இஸ்ண்ட் இட் ரொமான்டிக்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இந்த ஒப்பந்தத்துக்கு முன்னரே பிரியங்கா, ‘சிடாடெல்’ என்ற தொடரிலும், ‘சங்கீத்’ என்ற தொடரிலும் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதில் ‘சங்கீத்’ தொடரை பிரியங்காவின் கணவர் நிக் ஜோனாஸ் இணைந்து தயாரிக்கிறார். மேலும் நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பான ‘வி கேன் பி ஹீரோஸ்’ மற்றும் ‘தி வைட் டைகர்’ ஆகிய படங்களிலும் நடிக்கிறார். தற்போது ‘மேட்ரிக்ஸ் 4’ திரைப்படத்தில் பிரியங்கா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.