வித்யா பாலன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சகுந்தலா தேவி’ படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கணிதமேதை சகுந்தலா தேவி, தனது ஐந்தாவது வயதில், 18 வயது மாணவர்களுக்கான கணிதத்தைத் தீர்த்து வைத்தவர். அதிவேகமாக சிக்கலான கணக்குகளைப் போடுவதில் வல்லவர். மனித கம்ப்யூட்டர் என்று போற்றப்படுபவர். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகியுள்ளது.
இதில் சகுந்தலா தேவியாக வித்யா பாலன் நடித்துள்ளார். அனு மேனன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கோடை வெளியீட்டுக்குத் தயாரானது. இந்தச் சூழலில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தச் சமயத்தில் ஓடிடி தளங்களில், வெளியீட்டுக்குத் தயாராகி இருக்கும் படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார்கள். அதில் இந்தியில் முதலாவதாக அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா நடித்த ‘குலாபோ சிதாபோ’ வெளியானது. அதனைத் தொடர்ந்து ‘சகுந்தலா தேவி’ வெளியாகும் என்று அமேசான் நிறுவனம் அறிவித்தது.
ஆனால், எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது ஜூலை 31-ம் தேதி அமேசான் ப்ரைமில் ‘சகுந்தலா தேவி’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று தெரிகிறது.