சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு ஆர்.கே.செல்வமணி பதிலளித்துள்ளார்.
கொரோனா நோய் பரவுவதை தவிர்க்க ஊரடங்கு சட்டம் கொண்டுவரப்பட்டது. சினிமா மற்றும் ‘சின்னத்திரை’ படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்டன.
கடந்த 3 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. இதேபோல் ‘சின்னத்திரை’ படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், சில தொலைக்காட்சிகளில் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட தொடர்களின் காட்சிகளை மீண்டும் ஒளிபரப்பி வருகிறார்கள்.
இந்தநிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடந்த மாதம் 8-ந் தேதி முதல் ‘சின்னத்திரை’ படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதி வழங்கியது. ஒரே வாரத்தில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த மாதம் 16-ந் தேதி முதல் ‘சின்னத்திரை’ படப்பிடிப்புகள் மறுபடியும் நிறுத்தப்பட்டன.
வருகிற 8-ந் தேதி முதல் மீண்டும் ‘சின்னத்திரை’ படப்பிடிப்புகளை நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். ‘சின்னத்திரை’ குழுவினர் படப்பிடிப்பு நடத்த தயாராகி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
“சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்? படப்பிடிப்புகள் தொடங்குவது எப்போது?” என்று கேட்டபோது, “இன்னும் சில மாதங்கள் ஆகிவிடும்” என்று பதில் அளித்தார். தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் முன்பு போல் கூட்டம் வருமா, வராதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.